அதிகரிக்கும் கொரோனா- யாழில் வெசாக் கொண்டாட்டம் தொடர்பான தீர்மானம்!

351 0

தற்போதைய கொரோனா நிலைமையினை அனுசரித்து தேசிய வெசாக் உற்சவத்தினை நடத்த தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் நயினாதீவில் தேசிய வெசாக் நிகழ்வுகள் இடம்பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் தேசிய வெசாக் உற்சவ முன்னேற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் புத்தசாசன அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்த்தனவின் தலைமையில் மாவட்ட அரசாங்க அதிபரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

குறித்த முன்னேற்பாட்டு கூட்டத்தில் தேசிய வெசாக் நிகழ்விற்கென தற்போது வரை முன்னெடுக்கப்படும் முன்னேற்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டதோடு தற்போதுள்ள கொரோனா நிலைமைக்கு ஏற்றவாறு அனுசரித்து அதற்கு ஏற்றவாறு எதிர்வரும் மே மாதம் இடம்பெறவுள்ள தேசிய வெசாக் நிகழ்வினை நடத்துவது எனவும் நிகழ்வில் பங்குபற்றுவோரின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதோடு தற்போதைய இடர் நிலைமையில் இடம்பெறுவதன் காரணமாக சுகாதார நடைமுறைகள் மற்றும் ஏனைய செயற்பாடுகள் தொடர்பில் இன்றைய தினம் ஆராயப்பட்டது.

எனினும் தற்போது அதிகரித்து வரும் தொற்று நிலைமையினை கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் மிக அமைதியான முறையில் தேசிய வெசாக் நிகழ்வினை கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது.  குறித்த முன்னேற்பாட்டு கூட்டத்தில் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி முப்படைகளின் பிரதிநிதிகள் ,புத்தசாசன அமைச்சின் செயலாளர் அதிகாரிகள் மாவட்ட செயலக அதிகாரிகள் வேலணை பிரதேச செயலர் மற்றும் மதகுருக்கள் கலந்து கொண்டனர்.