ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்படும்- வாசுதேவ நாணயக்கார

298 0

blogger-image-1329813860ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பொரளையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்த வாசுதேவ நாணயக்கார…

ஸ்ரீலங்கா காப்புறுதிக் கூட்டுத்தாபனம் குறைந்த விலையில் விற்பனை செய்ய முயற்சிக்கப்பட்ட போது அரச சொத்துக்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவது சட்டவிரோதமானது எனத் தெரிவித்து உச்ச நீதிமன்றம் குறித்த கொடுக்கல் வாங்கலை இரத்து செய்திருந்தது.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் 99 ஆண்டு கால குத்தகை அடிப்படையில் சீனாவிற்கு வழங்கப்பட உள்ளது.
இந்த 99 ஆண்டு கால குத்தகை முடிவடையும் காலத்தில் மீளவும் 99 ஆண்டுகள் குத்தகை காலத்தை நீடிக்கக்கூடிய சரத்து ஒன்று உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் இதனை எந்த வகையில் அர்த்தப்படுத்தினாலும் இது ஓர் அரச சொத்து விற்பனையேயாகும்.
துறைமுகம் மற்றும் காணிகளின் பெறுமதி மதிப்பீட்டின் ஊடாக மிகவும் குறைந்த தொகைக்கு இந்த சொத்து விற்பனை செய்யப்பட உள்ளமை அம்பலமாகியுள்ளது.

இலங்கைக்கு முதலீட்டாளர்கள் வருகை தருவதில் எவ்வித எதிர்ப்பும் கிடையாது எனினும், ஆயிரக் கணக்கான ஏக்கர் காணிகள் வெளிநாட்டவருக்கு வழங்குவதனையே எதிர்க்கின்றோம்.
என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.