ஈஸ்டர் தாக்குதல்: ஏராளமான தகவல்களை அறிந்த ஒருவர் தொடர்பான தகவலை வெளியிட்டார் பொலிஸ்மா அதிபர்

239 0

ஈஸ்டர் தாக்குதலைத் திட்டமிட்டமை தொடர்பாக ஏராளமான தகவல்களை அறிந்த ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும்  அவரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையில் ஏராளமான தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் கூறியுள்ளதாவது, ‘சஹரான் ஹாஷிமின் சகோதரர் மொஹமட் ரில்வான், கடந்த 2018 இல் வெடிக்கும் சாதனமொன்றை சோதிக்க முயன்றபோது காயமடைந்தார். இந்த சம்பவம் ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் நடைபெற்றுள்ளது.

மேலும் வெடிபொருட்களை யார் சோதனைக்கு கொண்டு வந்தார்கள், சோதனை எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பாக  தெளிவாகத் தெரியவில்லை.

இந்நிலையில் ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் கல்முனையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் முகமது ரில்வான் உயிரிழந்தார். குறித்த சம்பவம் தொடர்பாக பயங்கரவாத புலனாய்வு பிரிவு நீண்ட விசாரணைகளை நடத்தியது.

குறித்த விசாரணையில் ஈஸ்டர் தாக்குதலைத் திட்டமிட்டவர்கள் யார், வெடிக்கும் சோதனைக்கான மூலப்பொருள் வழங்கியவர்கள் யார் உள்ளிட்ட  பல்வேறு விடயங்கள் தொடர்பாக பயங்கரவாத புலனாய்வு பிரிவு தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் காந்தான்குடியில் வசிக்கும் 28 வயதான ராசிக் ராசா, ரில்வானுடைய  பரிசோதனைக்கு உதவியதாக நீண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவர் அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார்.  இருப்பினும், பயங்கரவாத பிரிவு, நீதிமன்றத்தில் நேற்று முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில், அவரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் பயங்கரவாதிகள் எவ்வாறு திட்டமிட்டார்கள் என்பது பற்றி அவருக்கு நிறைய விடயங்கள்தெரியும் என்று சந்தேகிக்கப்படுகிறார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.