உலக ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலின் படியே சீன அமைச்சரின் வருகை அமைந்தது- சந்திரசேகரம்

298 0

உலக ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலின் படியே சீனாவின் பாதுகாப்பு அமைச்சரின் இலங்கைக்கான விஜயம் அமைந்திருந்தாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சந்திரசேகரம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சீனாவை மட்டுமல்லாது அனைத்து ஏகாதிபத்திய நாடுகளிள் அதிகாரப் போக்கையும் எதிர்க்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “இலங்கை மீதான ஏகாதிபத்தியவாதிகளுடைய அழுத்தம் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. தற்போது புதிய போட்டியாளராக வந்திருக்கின்ற சீனாவினுடைய ஆதிக்கமும் அதிகரித்து வருகின்றது.

ஏகாதிபத்தியவாதிகளுடைய ஆதிக்கம் என்பது இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

பிரித்தானிய ஏகாதிபத்தியம், அமெரிக்க ஏகாதிபத்தியம், ஜப்பானிய ஆதிக்கம் என தொடர்ந்துவரும் நாட்டை சூறையாடிய ஆதிக்கங்களைப் போலவே தற்போது வந்துள்ள சீனாவும் இலங்கையில் வளங்களைச் சூறையாடும் போக்கைக் கொண்டுள்ளது.

எனவே, ஏகாதிபத்தியத்துக்கு எதிரான எதிர்ப்பு என்பது வெறுமனே சீனாவுக்கு எதிரானது அல்லாமல் ஐரோப்பிய, அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கும் எதிராக வலுக்க வேண்டும்.

தற்போது, நமது நாடு கடன் பொறிக்குள் சிக்கியுள்ளது. இந்த வருட இறுதியில் 18 டிரில்லியன் வரையில் கடனாளியாக நாடு மாறவுள்ளது. அத்துடன், ஏற்றுமதி, இறக்குமதி அனைத்திலும் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால், பாரிய கடன் பொற்றிக்குள்ளேயே நாடு தள்ளப்படும் நிலை காணப்படுகிறது.

இதேவேளை, நாட்டுக்குக் கிடைத்திருந்த கடன்களில் 85 வீத கடன்கள் ஐரோப்பிய நாடுகளாலேயே வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் கடன் பொறிக்குள் நாடு சிக்கியுள்ளதைச் சுட்டிக்காட்டுகிறோம்.

அந்தவகையில், சீனாவின் பாதுகாப்பு அமைச்சரின் வருகை என்பது வெறுமனே, சீனாவினுடைய தன்னாதிக்க எதேச்சதிகார நிலைமைகள் மாத்திரமல்ல. இதுவரையில் எடுக்கப்பட்டுவந்த உலக ஏகாதிபத்தியத்தினுடைய ஒரு அங்கமாகவே சீனாவினுடைய பாதுகாப்பு அமைச்சரின் வருகை அமைந்தது.

இந்நிலையில், இந்த உலகத்தைச் சூறையாடுகின்ற அமெரிக்கா உட்பட அனைத்து ஏகாதிபத்தியவாதிகளுக்கும் எதிராக நாம் குரல்கொடுக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.