சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின பேரணியை தனித்து நடத்துவதற்கு தீர்மானித்திருந்த போதிலும், கொவிட்-19 வைரஸ் காரணமாக அதனை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எனினும் கட்சியின் தொழிற் சங்கத்துடன் கலந்துரையாடி தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையை ஜனாதிபதிக்கு கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஆடை தொழிற்சாலை திணைக்களத்திற்கான பயிற்சி ஆலோசகர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்கிழமை அமைச்சரின் தலைமையில் உலக வர்த்தக மையத்தில் இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
சுதந்திரக் கட்சியின் மே தின பேரணி காலாகாலமாக தனித்தே நடத்தப்பட்டு வந்துள்ளது. அதற்கமைய இம்முறையும் அவ்வாறு நடத்தவே தீர்மானித்திருந்தோம். எனினும் வைரஸ் பரவல் காரணமாக மே தின பேரணிகளை நடத்த வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதனால் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்து ஜனாதிபதியிடம் அறிக்கையொன்றை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.
இந்நிலையில், கட்சியின் முன்னேற்றம் குறித்து கட்சியின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றது. அதற்கமைய எதிர்வரும் மாகாணசபை தேர்தல் தொடர்பிலும் இதன்போது பேசப்பட்டு வருகின்றது . தேர்தல் தொகுதி ஒன்றுக்கு மூன்று உறுப்பினர்கள் தெரிவுச் செய்யப்படுவது மற்றும் மேலதிக உறுப்புரிமை வழங்கல் போன்ற செயற்பாடுகளுக்கு நாம் எதிர்ப்பை தெரிவிப்பதுடன் அரசாங்கத்தின் சிறந்த செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பை வழங்குவோம்.
இதேவேளை கட்சியின் முன்னேற்றத்திற்காக நாம் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றோம் இந்நிலையில் கட்சிக்குள் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் அதனை சுமூகமாக தீர்க்க நடவடிக்கையை எடுப்போம். கட்சி உறுப்பினர்களுடன் மாத்திரமே கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன
கேள்வி : பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ அண்மையில் பாராளுமன்றத்தில் சுதந்திரக் கட்சித் தொடர்பில் பல்வேறு கருத்துகளை முன்வைத்து விட்டு , மறுநாள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான உங்களது கருத்து என்ன?
பதில்: பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெனாண்டோ வைத்தியசாலையில் ஏன் அனுமதிக்கப்பட்டார் ; என்பது தொடர்பில் எமக்கு தெரியாது. எனினும் 2 வருடங்களுக்கு முன்னர் அவர் தெரிவித்த சில விடயங்கள் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காகவே அவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டால் இங்கு சென்று வாக்குமூலம் வழங்குவதே சிறந்த செயற்பாடாகும்.