தென் மாகாண பாடசாலைகள் தொடர்பான தீர்மானம் இன்று

256 0

தற்போதைய கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு மத்தியில் தென் மாகாணத்தில் பாடசாலைகளை நடத்துவதா இல்லையா என்பது பற்றி இறுதித் தீர்மானம் இன்று எடுக்கப்படும் என்று மாகாண கல்விச் செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் தென்மாகாண ஆளுநர் விலி கமகேயுடன் இடம்பெறவுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது தற்போது தென்மாகாணத்தில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கருத்திற் கொண்டு மேல் மற்றும் வட மேல் மாகாணங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக் கிழமை வரை மூடப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த மாகாணங்களில் உள்ள முன்பள்ளி மற்றும் பிரிவெனாப் பாடசாலைகளும் மூடப்படும். இவ்விரு மாகாணங்களிலும் உள்ள தனியார் பாடசாலைகளும் வெள்ளிக்கிழமை வரை மூடப்படும் எனறும் குறிப்பிட்டார்.

பல மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் இன்று இடம்பெறுகின்ற போதிலும் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பும் போது சுகாதாரப் பாதுகாப்பு முறைகளை கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.