காற்றில் பறக்கும் அரசு உத்தரவு- தமிழகம் வரும் வெளிமாநில பயணிகளுக்கு இ-பாஸ் சோதனை நடத்தவில்லை

262 0

தமிழகம் வரும் வெளிமாநில பயணிகளுக்கு ‘இ-பாஸ்’ சோதனை நடத்தவில்லை. ரெயில்-பஸ் நிலையங்களுக்கு பயணிகள் வழக்கம் போல் வந்து செல்கின்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. அந்த கட்டுப்பாட்டின் ஒரு பகுதியாக புதுச்சேரி தவிர்த்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் நபர்கள் http://eregister.tnega.orgஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து பெறப்பட்ட ‘இ-பாஸை’ தமிழகத்துக்குள் நுழையும் போது காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவர் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்தநிலையில் நேற்று முதல் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களிடம் தமிழக அரசு அதிகாரிகள் ‘இ-பாஸ்’ சோதனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு நேர் எதிராக, யாரிடமும் ‘இ-பாஸ்’ சோதனையை அதிகாரிகள் நடத்தவில்லை. வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் வழக்கம் போல பஸ்-ரெயில் நிலையங்களுக்கு வந்து சென்றனர்.
ரெயில் நிலையங்களில் டிக்கெட் பரிசோதகர்களாவது ‘இ-பாஸ்’ சோதனையை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்களும் டிக்கெட் பரிசோதனை மட்டுமே மேற்கொண்டனர். பஸ்-ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை மட்டும் தொடர்ந்து நடைபெற்றது. இந்தநிலையில் ‘இ-பாஸ்’ சோதனை குறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தொடர்கிறது. இதில் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு ‘இ-பாஸ்’ கட்டாயம் என தமிழக அரசு தான் அறிவித்துள்ளது. ரெயில்வே நிர்வாகம் சார்பில் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை.
பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே ‘இ-பாஸ்’ பெற வேண்டும் என தெற்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில், அவர்களது செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்படுகிறது. வெளிமாநில பயணிகள் ‘இ-பாஸ்’ பெற்று வருகிறார்களா? என்பதை கண்காணிக்க எங்களுக்கு எந்த ஒரு உத்தரவும் ரெயில்வே வாரியம் பிறப்பிக்கவில்லை. ரெயில்வே சார்பில் கொரோனா வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை தான் கண்காணிக்கிறோம். ‘இ-பாஸ்’ முறையை கண்காணிப்பது தமிழக அரசின் பணி. அவர்கள் தான் இதனை மேற்கொள்ள வேண்டும்,’ என்றார்.
இந்தநிலையில் வெளிமாநில பயணிகள் இ-பாஸ் முறையை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவு காற்றில் பறப்பதாகவும், கொரோனாவை ஒழிக்க தமிழக அரசு இந்த நடைமுறையை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.