இது உங்கள் இடம்: நீலிக்கண்ணீர் வடிக்காதீர்!

262 0

இந்தியாவில், கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் மோசமாக உள்ளது; தினந்தோறும், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா பாதித்து உயிரிழப்பதற்கு, ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி பற்றாகுறை முக்கிய காரணமாக இருக்கிறது.

தி.மு.க., இளைஞர் அணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின், ‘தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை, வெளிமாநிலங்களுக்கு துாக்கிக் கொடுப்பது, மத்திய அரசு, தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம்’ எனக் கூறி மனவேதனை அடைந்துள்ளார்.

தமிழக மக்கள் மீது, அவருக்கு இருக்கும் அக்கறை பாராட்டத்தக்கது.மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்த ஷானவாஸ் சேக் என்ற இளைஞர், கொரோனாவால் பாதிப்படைந்த ஏழை நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற, ஆக்சிஜன் சிலிண்டர் இலவசமாக கிடைக்கும் சேவையை, தனி ஒருவனாக செய்து வருகிறார்.ஒரு கட்டத்தில், பணப் பற்றாக்குறை வந்ததால், தான் ஆசையாக வாங்கிய, 28 லட்சம் சொகுசு காரை விற்பனை செய்து, அந்த சேவையைதொடர்ந்துள்ளார்.

சாதாரண மனிதர்களே, கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சேவை செய்யும் போது, மக்கள் சேவைக்காகவே, கட்சி ஆரம்பித்துள்ள, தி.மு.க.,வினர் சும்மா இருக்கலாமா? சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற ஆலோசனை கூறும், ‘கார்ப்பரேட்’ நிறுவனத்திற்கே, 300 கோடி ரூபாய் அள்ளிக் கொடுத்த, தி.மு.க., தலைமை, கொரோனா பேரிடரில் சிக்கியிருக்கும் நாட்டிற்கு என்ன செய்தது?

latest tamil news

 

ஆக்சிஜன் கிடைக்காமல் ஆயிரக்கணக்கானோர் செத்து மடிகின்றனரே… அவர்களை காப்பாற்ற, பல கோடி ரூபாய்களுக்கு சொந்தக்காரரான உதயநிதி என்ன செய்துள்ளார்? ஆட்சியில் இருக்கும்போது, மக்களிடம் கொள்ளையடித்த பணத்தில் தானே, அரசியல்வாதிகளின் குடும்பம் சொகுசு வாழ்க்கை வாழ்கிறது. அவர்களின் வாரிசுகள், சினிமா எடுக்கின்றனர்; கவர்ச்சி நடிகையுடன், ‘டூயட்’ பாடுகின்றனர்.

கொரோனாவால் சாகக்கிடக்கும் மக்களுக்காக, நீலிக்கண்ணீர் வடிக்காமல், அவர்களை காப்பாற்ற ஆக்கப்பூர்வமான காரியத்தில், உதயநிதி உள்ளிட்ட அரசியல்வாதிகள் ஈடுபட வேண்டும்.