பாகிஸ்தானை விடாத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்தது

270 0

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரசின் 3-வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களாக அங்கு வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் 4,825 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் அங்கு கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்துள்ளது. இதுவரை அங்கு 8 லட்சத்து 452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நேற்று ஒரே நாளில் 70 பேர் கொரோனாவுக்கு பலியானது மூலம் மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 17 ஆயிரத்து 187 ஆக அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் அதே வேளையில், தடுப்பூசி செலுத்தும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. கடந்த பிப்ரவரி 2-ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கிய நிலையில் இதுவரை 17 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, பாகிஸ்தான் அரசு சீனாவின் சினோபார்ம் நிறுவனத்திடமிருந்து 3-வது கட்டமாக 10 லட்சம் தடுப்பூசிகளை வாங்கியுள்ளது.