டெல்லியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி – கெஜ்ரிவால் அறிவிப்பு

267 0

டெல்லியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும். அதற்காக, 1.34 கோடி டோஸ்கள் வாங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

கொரோனா 2-வது அலையின் தீவிர தாக்கத்தால் தலைநகர் டெல்லி தடுமாறி வருகிறது. கொரோனாவின் கொடூர பிடியில் இருந்து மக்களைக் காப்பாற்ற டெல்லி யூனியன் பிரதேச அரசும், மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் காணொலி வாயிலாக நேற்று பேசியபோது கூறியதாவது:-

‘டெல்லியில் கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தடுப்பூசி வாங்கும், அதை மக்களுக்கு செலுத்தும் பணியை வேகப்படுத்த அரசு முயற்சிக்கும்.

எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக பெரிய அளவில் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.

டெல்லியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும். அதற்காக, 1.34 கோடி டோஸ்கள் வாங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிகள் அனைத்துக்கும் ஒரே விலை இருக்க வேண்டும். அவற்றின் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது மனிதகுலத்துக்கு சேவை செய்வதற்கான நேரம், லாபம் சம்பாதிப்பதற்கான தருணம் அல்ல என்று உணர்ந்து தடுப்பூசி தயாரிப்பாளர்களும் அதன் விலையைக் குறைக்க வேண்டும்.

கொரோனாவால் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இறப்பதாக தகவல்கள் வருகின்றன. எனவே அவர்களுக்கான சரியான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

தடுப்பூசிதான் கொரோனாவுக்கான தீர்வாக உருவாகியுள்ளது. பெரிய அளவில் தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டதன் மூலமே கொரோனாவின் தீவிரத்தை இங்கிலாந்து தடுத்ததாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

எல்லோருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டால், கொரோனா என்பது சாதாரண நோயாகிவிடும்.’

இவ்வாறு அவர் கூறினார்.

தெற்கு டெல்லி சத்தார்பூரில் இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படையால் செயல்படுத்தப்படும் கொரோனோ சிகிச்சை மையத்துக்கு கெஜ்ரிவால் நேற்று சென்றார். கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் இம்மையத்தில், ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 200 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளும் அங்கு ஏற்படுத்தப்படும் என்றும், அங்கு டாக்டர்கள், மருத்துவ ஊழியர்களை வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.