ஆக்சிஜன் தயாரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தற்காலிக அனுமதி

259 0

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது.நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாவது அலை வீச்சில் தினமும் லட்சக்கணக்கானோர் பாதிப்பு அடைந்து வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நோயாளிகளுக்கு சுவாசிக்க வென்டிலேட்டர் மூலம் ஆக்சிஜன் வழங்குவது இன்றியமையாத தேவையாக உள்ளது.

ஆக்சிஜன் தட்டுப்பாட்டால், தலைநகர் டெல்லியில் கொரோனா நோயாளிகளைக் காப்பாற்ற போராடி வருகிறார்கள். தமிழகத்திலும் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, தூத்துக்குடியில் மூடப்பட்டு கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதித்தால், ஆக்சிஜன் தயாரித்து இலவசமாக வழங்குவதாக சுப்ரீம் கோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் தெரிவித்தது.

தமிழக அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்தது. அதே நேரத்தில், மத்திய அரசு தரப்பில், ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே கையகப்படுத்தி ஆக்சிஜன் தயாரிக்கலாம் என்று யோசனை வழங்கியது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியும் இதே கருத்தை வலியுறுத்தினார்.மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு தரப்பில் விளக்கமாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை 9.30 மணி அளவில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் ராஜீவ்ரஞ்சன், போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்பட அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அரசியல் கட்சிகளில் இருந்து தி.மு.க. சார்பில் மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே.வி.தங்கபாலு, செயல் தலைவர் கே.ஜெயக்குமார் எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சவுந்தரராஜன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநில செயலாளர் இரா.முத்தரசன், எம்.வீரபாண்டியன், பா.ம.க. சார்பில் மாநில துணை பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஏ.கணேஷ்குமார், பா.ஜ.க. சார்பில் கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன், பொதுச் செயலாளர் கே.டி.ராகவன், தே.மு.தி.க. சார்பில் நிர்வாகிகள் எஸ்.அன்புராஜ், வி.டி.பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டு தங்களது கட்சி நிலைப்பாட்டை தெரிவித்தனர். முன்னதாக, முதலமைச்சர் பழனிசாமி அரசின் நிலைப்பாட்டை தெரிவித்தார்.

அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளிப்பது என்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, தூத்துக்குடி வேதாந்தா நிறுவனத்தில் அமைந்துள்ள ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் அதைச் சார்ந்த எந்திரங்களை மட்டும் சீர் செய்து இயக்கிக் கொள்ள தற்காலிகமாக (4 மாதங்களுக்கு மட்டும்) கொரோனா தொற்று காலம் முடியும் வரை தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் வழங்கப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி இயங்க அனுமதிக்கலாம். ஆக்சிஜன் தேவையை கருத்தில் கொண்டு, நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில் இந்த காலம் பின்னர் நீட்டிக்கப்படலாம். இத்தொழிற்சாலையில் எக்காரணத்தைக் கொண்டும், தாமிர உற்பத்தி உள்பட எந்தவித உற்பத்தியையும், மின் உற்பத்தி அலகையும் திறக்கவோ, இயக்கவோ அனுமதிக்கப்பட மாட்டாது. இந்த குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.

உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனில் தமிழ்நாட்டிற்கே முன்னுரிமை வழங்க வேண்டும். தமிழ்நாட்டின் தேவைபோக அதிகப்படியாக உள்ளதை மட்டும் பிற மாநிலங்களுக்கு வழங்கலாம்.ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பகுதியில், ஆக்சிஜன் உற்பத்தியுடன் நேரடி தொடர்புடைய தொழில்நுட்ப பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். எக்காரணத்தை கொண்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் அலகைத் தவிர வேறு எந்த அலகும் செயல்பட அனுமதிக்கப்படாது.

தற்காலிக ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க தமிழ்நாடு அரசால் மாவட்ட கலெக்டரின் தலைமையில் ஒரு கண்காணிப்பு குழு அமைக்கப்படும். கண்காணிப்பு குழுவில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, சப்-கலெக்டர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், ஆக்சிஜன் தயாரிக்கும் தொழிற்சாலை தொழில்நுட்பத்தில் அறிவார்ந்த 2 அரசு அலுவலர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சுற்றுச்சூழல் சார்ந்த அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் ஆலை எதிர்ப்பு குழுவினர் ஆகியோரில் இருந்து 3 நபர்கள் இடம்பெறுவர். இந்த குழு, ஆக்சிஜன் தயாரிக்கும் முழு பணியையும் மேற்பார்வையிடும் மற்றும் ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலையை இயக்குவது பற்றி இந்த குழு முடிவெடுக்கும் என தெரிவித்துள்ளது