அரசாங்கத்தை விமர்சிப்போர் பழிவாங்கப்படுகின்றனர் : ஜனநாயக நாட்டில் சர்வாதிகாரப் போக்கில் செயற்பட வேண்டாம் – எரான்

249 0

அரசாங்கத்தின் தோல்விகளை சுட்டிக்காட்டுகின்றமையால் எதிர்க்கட்சியினர் பழிவாங்கப்படுகின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதங்களை கேள்விகுறியாக்கி ஜனநாயகத்தை இல்லாதொழிக்கவே அரசாங்கம் முயற்சிக்கிறது.

ஜனநாயக நாட்டில் இவ்வாறு சர்வாதிகார போக்கில் செயற்பட வேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிறுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

அனைத்து துறைகளிலும் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. இதனை சுட்டிக்காட்டுக்கும் எதிர்கட்சியினரை தாக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.

பாராளுமன்றத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இதனை காணக் கூடியதாக இருந்தது.

இலங்கையில் மாத்திமல்ல : எந்தவொரு நாட்டிலும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் குரல் கொடுப்பதற்கான உரிமை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு காணப்படுகிறது.

ஆனால் மக்களுக்காக குரல் கொடுத்தமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவுக்கு குற்ற விசாரணைப்பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதங்கள் நீக்கப்பட்டு நாட்டில் ஜனநாயகத்தை இல்லாதொழிக்கும் முயற்சிகளே முன்னெடுக்கப்படுகின்றன.

தற்போது ரிஷாத் பதியுதீனும் கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளார். தற்போது அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

அவ்வாறிருக்கையில் திடீரென அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவ்வாறான செயற்பாடுகள் மூலம் எதிக்கட்சியினர் பழிவாங்கப்படுகின்றனர். சர்வாதிகார ஆட்சிமுறையே முன்னனெடுக்கப்படுகிறது.

ஜனநாயக நாட்டுக்குள் இவ்வாறு செயற்பட வேண்டாம் என்று வலியுறுத்துகின்றோம். ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நீதிமன்ற செயற்பாடுகளை பாராளுமன்றம் கையிலெடுக்க முடியாது என்றார்.