கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 702 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் குறித்த விசாரணை குறித்து பல்வேறு இடங்களில் கருத்துக்களை தெரிவிப்போரிடமும் அறிக்கைகள் பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
குற்றவியல் சட்டக்கோவை 110 ஆவது சரத்துக்கு அமைவாக பொலிசாருக்கு இந்த அதிகாரம் இருப்பதாகவும் அவர் கூறினார். உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பாக பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (24) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின் போது இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
கைதுசெய்யப்பட்டவர்களில் 202 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் 83 பேர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.
2018 ஆம் ஆண்டு 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற தீவிரவாதம் தொடர்பாக இடம்பெற்ற சம்பவங்கள் குறித்தும் நாம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றோம். இதுதொடர்பாக இதுவரையில் சந்தேகத்தின் பேரில் 697 கைது செய்யப்பட்டுள்ளனர்.
இறுதியாக குளியாப்பிட்டி பிரதேசத்தில் மூவரும் இன்று (24) காலை இருவரும் காலை கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் 702 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் 83 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பொறுப்பில் குற்றச்செயல் தடுப்பு பிரிவு பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இவர்கள் மத்தியில் பல்வேறு நபர்கள் இருக்கின்றனர். விசேடமாக முக்கிய கொலையாளியான சஹரான் ஹஷீமின் மனைவி அப்துல் காதர் பாதிமா ஹாதியாவின் தந்தை உள்ளிட்டோரும் இருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்.