பிரித்தாளும் தந்திரத்துடன் தமிழர் – முஸ்லிம்களை மோதவிடும் சூழ்ச்சி- கல்முனையில் நடப்பது குறித்து ஸ்ரீசேநன்

332 0
????????????????????????????????????

பிரித்தாளும் தந்திரத்துடன தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் மோதவிடும் வகையில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தொடர்பான செயற்பாடுகள் காணப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொதுஜன பெரமுன அரசாங்கம் ஆட்சியமைத்ததன் பின்னர் தமிழ் பேசும் மக்களை நோக்கி பலவகையில் தாக்குதல்கள் மற்றும் சீண்டும் செயற்பாடுகள் நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் மட்டு.ஊடக அமையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், கல்முனை வடக்குப் பிரதேச செயலக விடயமானது 1990ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் முன்னாள் அமைச்சர் கே.டபிள்யூ. தேவநாயகத்தினால் கையாளப்பட்டிருந்ததுடன் 1993ஆம் ஆண்டு காலப்பகுதியில் 28 பிரதேச செயலகங்கள் அமைப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளிவந்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இதன்போது, கல்முனை வடக்கு உப பிரதேச செயலகமாக அமைக்கப்பட்டபோதும் அதனை, பிரதேச செயலகமாக உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக ஸ்ரீநேசன் கூறியுள்ளார்.

இந்நிலையில், குறித்த உப பிரதேச சபையை தரமுயர்த்துவதில் கடந்த ஆட்சிக்காலத்தில் இழுத்தடிப்புச் செய்யப்பட்ட நிலையில் ஆட்சியும் கலைந்தது.

இதன்பின்னர், தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துப் பேசியதன் பின்னர் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு தற்போது இருக்கின்ற அதிகாரத்தையும் தர நிலையையும் குறைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைக் கண்டித்துள்ள அவர், தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக பேசிக்கொண்டிருக்கும் வேளையில் பிரதேச நிர்வாக அலுகுக்குரிய அதிகாரத்தைக்கூட முழுமையாக வழங்காமல் முஸ்லிம் மற்றும் தமிழ் அரசியல்வாதிகளையோ அல்லது இரு சமூகத்தையும் மோதவிடுவதற்கான பிரித்தாளும் தந்திரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வியடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டிய தேவையுள்ளதாக ஸ்ரீநேசன் கூறியுள்ளார்.

இதேவேளை, கல்குடாவில் உள்ள தொப்பிக்கல் பகுதியான, முன்னர் அதிகளவில் போராளிகள் இருந்த பகுதியில் பௌத்த மத்திய நிலையம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, மாவட்ட அரசாங்க அதிபர், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் போன்றவர்கள் மக்களுக்கு தகவல்களைக்கூட பரிமாறிக்கொள்ளும் நோக்கமில்லை எனவும் குறித்த பகுதிக்கு கடந்த ஏப்ரல் 20ஆம் திகதி பிரதேச செயலாளர், மின்சார சபையினர், மகாவலி வீதி அபிவிருத்தி அதிகார சபையினர், வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினர் போன்றோருடன் ஆளுநரின் பிரத்தியேக குழுவும் அப்பகுதிக்குச் சென்ற நிலையில் அங்கு பௌத்த மத்திய நிலையம் அமைப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர் என ஸ்ரீநேசன் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கை படைப் பலத்துடன் முன்னெடுக்கப்படுவதாகவும் சிறுபான்மை தமிழ் பேசும் மக்களின் காணி, நிலங்களை கையாடல் செய்வதற்காக அந்தப் படைப் பலத்தைப் பிரயோகிக்கின்ற செயற்பாடு நடைபெறுகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த அரசாங்கம் தமிழ் பேசும் மக்களை பல்வேறு வகையில் இக்கட்டான நிலைக்குத் தள்ளிக்கொண்டிருக்கின்றது” என ஸ்ரீநேசன் குறிப்பிட்டுள்ளார்.