கையிருப்பிலுள்ள தடுப்பூசிகள் 2 ஆம் கட்டம் வழங்கப் போதுமானதல்ல – லலித் வீரதுங்க

297 0

இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொண்ட அஸ்ராசெனேகா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ள போதிலும் , அவை எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் காலாவதியாகிவிடும்.

எனவே, மே மாதம் முதல் வாரத்திலிருந்து இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் துரிதமாக முன்னனெடுக்கப்படும் என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் கொவிட் தடுப்பூசி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான லலித் வீரதுங்க தெரிவித்தார்.

கொவிட் பரவல் தொடர்பான நேற்றைய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

இலங்கையில் கடந்த ஜனவரி 29 ஆம் திகதி முதல் கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதற்கமைய இதுவரையில் 9 இலட்சத்து 25 242 பேருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இவர்களில் 5 இலட்சம் பேர் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்களாவர். தற்போது 3 இலட்சத்து 56 000 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

அவை ஜூன் மற்றும் ஜூலை மாதங்களின் இடைப்பகுதியில் காலாவதியாகிவிடும். எனவே மே மாதம் முதல் வாரம் முதல் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் துரிதமாக ஆரம்பிக்கப்படும்.

எவ்வாறிருப்பினும் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்குவதற்கு தற்போது கையிருப்பில் உள்ள அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகள் போதுமானதல்ல. இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையால் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதில் சற்று கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிடம் 15 இலட்சம் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதில் முதற் கட்டமாக 5 இலட்சம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. எஞ்சிய தொகையில் இரண்டரை இலட்சம் தடுப்பூசிகளையேனும் விரைவில் பெற்றுக் கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கின்றோம்.

மேலும் இந்தியாவின் சீரம் நிறுவனம் தவிர்ந்த அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகளை தயாரிக்கும் ஏனைய நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அஸ்ட்ரசெனிகா மாத்திரமின்றி சீனோபார்ம் , ஸ்புட்னிக் , பைசர் உள்ளிட்டவை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை என்பவற்றின் அனுமதி கிடைத்த பின்னர் அவற்றை கொள்வனவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.