கொழும்பு டில்லியைப் போல உருவாகலாம் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

244 0

கொழும்பு டில்லியைப் போல உருவாகலாம் என சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ், சிங்கள புத்தாண்டைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல பகுதிகளில் கொரோனா துணைக் கொத்தணிகள் உருவாகியுள்ளன என சுகாதார அதிகாரிகள் நேற்றைய தினம் தெரிவித்துள்ளனர் .

குருணாகல், நாரம்மல, அலவ்வ, கம்பஹா , கொழும்பு, புத்தளம் , திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் துணைக் கொத்தணிகள் உருவாகியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

ஆரம்பத்தில் துணை கொரோனா கொத்தணிகள் பிலியந்தலை, மஹரகம மற்றும் பமுனுவ பிரதேசங்களிலே உருவாகின. அதைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் துணை கொரோனா கொத்தணிகள் உருவாகியுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளரான பாலசூரிய தெரிவித்துள்ளார் .

ராகமவிலுள்ள படுவட்டே பகுதியைச் சேர்ந்த 12 பேருக்கும் திவுலப்பிட்டியைச் சேர்ந்த 26 பேருக்கும் புத்தாண்டு தொடர்பான பல்வேறு நிகழ்வுகளில் இவர்கள் பங்கேற்ற பின்னர் தொற்று இருப்பது கண்டறி யப்பட்டது. இது தொடர்பாக சுகாதார அதிகாரிகள் கூடிய அவதானம் செலுத்தியுள்ளனர் . இவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்கள்  கண்டறியப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார் .

 

மஹரகமவிலுள்ள பமுனுவ ஆடைச் சந்தையில் இரண்டு கடைகள் மூடப்பட்டன, அங்கு இரண்டு ஊழியர்கள் கொரோனா வைரஸ் தொற் றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டது. அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளில் இருந்த கிட்டத்தட்ட 22 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலைமையைக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கைகள் எடுக்கா விட்டால், மீண்டும் கொழும்பு புதுடில்லி போன்ற நிலைமையை எதிர்கொள்ளும் என்று சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

இது ஒரு முன்னெச்சரிக்கை மட்டுமே என்றும், எதிர்வரும் மூன்று வாரங்கள் முக்கியமானதாக இருக்கும் என்றும், சுகாதார வழிகாட்டுதல்களை மிகக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் இல்லையெனில் ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் பொது மக்களுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார் .