மாகாணசபையை பாதுகாக்க தமிழ் கட்சிகளை ஒன்றிணையுமாறு ரெலோ வேண்டுகோள் விடுத்துள்ளது.
ரெலோவின் ஊடக பேச்சாளர் சுரேந்திரன் இ;ந்த வேண்டுகோளை விடுத்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
ற்போதைய அரசியல் சூழலில் மாகாணசபைத் தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏதேதோ காரணங்கள் சொல்லி அரசினால் பின் போடப்பட்டு வருகிறது. குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்ந்தும் பின் போடப்படுவதால் மாகாண சபை முறைமை செயலிழந்துள்ளது.
கடந்த ஆட்சியில் இருந்து இது தொடர்டகிறது. இதனால் மாகாண சபை முறைமையை அவசியமற்றது என்று கருத்து கூற அரச தரப்பில் பலர் முன் வந்துள்ளனர்.
வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் ஆபத்தான கட்டத்தை எதிர்நோக்கி இருக்கிறார்கள். எமது பூர்விக தாயகப் பரப்பில் காணி நிலங்கள் அபகரிக்கப்பட்டு அபிவிருத்தி என்ற பெயரிலும் தொல்லியல் என்ற பெயரிலும் குடியேற்றங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. தேர்தல் முறைகளில் மாற்றம் கொண்டு வருவதாக கூறி அரசு சட்ட சிக்கலை முன்வைத்து மாகாணசபை தேர்தலை மேலும் பின்னடித்து செல்கிறது.
மாகாண சபை முறைமையை அரசியல் யாப்பில் இருந்து நீக்கிவிட வேண்டும் என்ற முழுவீச்சோடு பேரினவாத அரசாங்கங்கள் முயற்சி செய்து வருகின்றன. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட்டமையால் இந்தியாவினுடைய நேரடி அழுத்தத்தின் காரணமாக 13ம் திருத்தம் காப்பாற்றப் பட்டு வருகிறது. இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்பாமல் அல்லது முடியாமல், அதே நேரம் தமது முயற்சியும் கைகூடாமல் அரசு கைகட்டி நிற்கிறது. இழுத்தடிப்பு செய்தாவது நடைமுறைப் படுத்தாமல் காலம் தாழ்த்துவதன் மூலம் பயனற்றுப் போக வைக்கும் செயலாகவே இதை நாம் கருதுகிறோம்.
எமது தேசிய இனத்தின் கோரிக்கைகளுக்கு தீர்வாக இந்த மாகாண சபை முறைமை இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் போராட்ட அமைப்புகளின் தியாகத்திலும் இந்தியாவினுடைய முயற்சியாலும் இலங்கையின் அரசியல் சாசனத்தில் பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்தினூடாக உள்வாங்கப்பட்ட முக்கிய அரசியல் அம்சமாக இது கருதப்படுகிறது. வடக்கு கிழக்கை எமது பூர்வீக பிரதேசமாகவும் தமிழை தேசிய மொழியாக ஆட்சி மொழியாக அங்கீகரித்த இந்த ஏற்பாட்டை தமிழ் மக்கள் இழந்து விடமுடியாது. நிரந்தர தீர்வு கிடைக்கும் வரையான தற்காலிக தளமாக இது பேணப் படவேண்டும்.
காலாகாலமாக வந்த அரசுகளுடன் அரசியல் தீர்வு சம்பந்தமாக நடத்தப்பட்ட பல பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறவில்லை. அதே போல இப்பொழுது அரசு முன்வைத்திருக்கின்ற புதிய அரசியல் சாசனத்திற்கான நிபுணர்கள் குழுவிடம் பல்வேறு அரசியல் தீர்வினை தமிழர் தரப்புகள் முன்வைத்திருக்கிறன. ஏற்கனவே அரசியல் சாசனத்தில் உள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக எந்த அரசுகளும் நிறைவேற்றாத நிலையில், அரசியல் தீர்விற்கான ஆலோசனைகள் நிறைவேற்றப்படுமா அல்லது கருத்தில் கொள்ளப்படுமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
அப்படியான தீர்வினை எட்டும் வரைக்கும் , ஆகக் குறைந்த பட்சமாக கருதக்கூடிய மாகாணசபை முறைமையை பேணுவதற்கும், தமிழ் இனம் எதிர்கொண்டிருக்கும் அபாயகரமான நிலையை தடுப்பதற்கும்,
விரைந்து மாகாண சபை தேர்தலை நடாத்துவது அவசியம்.
தமிழ் கட்சிகள், தேர்தல் அரசியலையும் , தமக்குள் இருக்கும் கொள்கை முரண்பாடுகளையும் கடந்து இந்த விடயத்தை முன்னெடுக்க ஒன்றிணைந்து செயல்படுவது தற்போதைய காலத்தின் அவசியம் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
தமிழ் தேசியம் சார்ந்தவர்களும், மற்றைய தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துப் பயணிக்க தமிழ் ஈழ விடுதலை இயக்கம் கோரிக்கை விடுகிறது. இதற்கான முழுமையான செயற்பாட்டுக்கு எமது முற்றான ஆதரவையும் வழங்கவும் தயாராக உள்ளோம்.