இலங்கையில் இடம்பெற்ற சுமார் 30 வருட யுத்தத்தில் இருந்து மீண்டிருந்த மக்களை மீண்டும் நிலைகுலையச் செய்த ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் (புதன்கிழமை) 2 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.
எனினும் அன்றைய நாள் இன்றும் எம் கண் முன்னே நிழலான நிஜங்களாக நீங்காது இருக்கின்றன.
அன்றைய நாள், அழகான காலைப் பொழுதில் யேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் தினத்தை கொண்டாடும் அவாவில் இலங்கை வாழ் கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து தேவாலயங்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
நான்கு மதத்தவர்களும் வாழும் இலங்கை மண்ணில் கிறிஸ்தவர்கள் மாத்திரமன்றி அவர்களுடன் ஏனைய மதத்தவர்களும் இணைந்து யேசு உயிர்த்தெழுந்த தினத்தை கொண்டாடத் தயாராகினார்.
ஆனால், அன்றைய பொழுது அவ்வாறு அமையுமென யாரும் முன்பு கூறியிருந்தாலும் அதை இலங்கை மக்கள் நம்பியிருக்க வாய்ப்பில்லை.
காலை 8.45 மணியளவில் நாட்டையே அதிரவைத்த குண்டுச் சத்தங்கள்.. என்னவாக இருக்குமென யூகிப்பதற்குள் அதேபோன்ற சத்தங்கள் நாட்டின் பல இடங்களிலும் ஓங்கி ஒலித்தன.
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய செபஸ்டியன் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பு சியோன் தேவாலயம் ஆகியவற்றில் ஈஸ்டர் தின திருப்பலி பூஜைகள் இடம்பெற்றிருந்தபோது இந்த குண்டுவெடிப்புகள் இடம்பெற்றன.
தேவாலயங்களில் குண்டுவெடிப்புகள் இடம்பெறும் தகவல் நாடுமுழுவதும் சென்றடைவதற்குள், கொழும்பிலுள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல்களான கின்ஸ்பேரி, சங்கிரிலா மற்றும் சினமன் கிரேன்ட் ஆகிய ஹோட்டல்களையும் இலக்கு வைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தன.
அதுமட்டுமல்லாது பிற்பகல் வேளையில், தெஹிவளையில் உள்ள விலங்கியல் பூங்காவிற்கு அருகில் உள்ள பிரபல விடுதியிலும் இந்த பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதுடன், கொழும்பின் பல பகுதிகளிலும் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது மேலும் குண்டுகள் வெடித்தன.
கொழும்பு – தெமட்டகொடையில் உள்ள வீடொன்றில் குண்டுகள் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு தேடுதல் நடத்தப்பட்ட போது, குண்டுகள் வெடித்ததில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். நாட்டில் என்ன நடக்கிறது என்பதை சுதாகரிப்பதற்குள் எல்லாம் அரங்கேறி முடிந்தன.
புத்தாடை அணிந்து ஈஸ்டர் தினத்தைக் கொண்டாடச் சென்ற மக்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர், தேவாலயங்களில் தேவப்பாடல்களுக்குப் பதிலாக மரண ஓலமே வியாபித்திருந்தது.
நகர் முழுவதும் அம்புயூலன்ஸ் வண்டியின் சத்தங்கள் மக்களை அச்சத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றன.
சில மணிநேரங்களுக்குள் அனைத்தும் நடந்து முடிந்தன. இந்த தாக்குதல்களில் 39 வெளிநாட்டவர்கள் உட்பட சுமார் 250இற்கும் மேற்பட்டோரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. 500இற்கும் மேற்பட்டவர்கள் அவயவங்களை இழந்து குடும்பத்தை இழந்தனர்.
தாக்குதலைத் தொடர்ந்து, நாடு முற்றாக முடக்கப்பட்டு படையினர் வசமானது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு உரிமைக் கோரியது.
அதன் பின்னர் சில தினங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தாக்குதல்கள் தொடர்ந்து பதிவாகியிருந்தன. இஸ்லாமியர்களை இலக்கு வைத்து நாட்டின் பல பகுதிகளில் வன்முறைகள் இடம்பெற்றன.
இதனிடையே சாய்ந்தமருதில் பதுங்கியிருந்த தீவிரவாதக் குழுவை படையினர் சுற்றிவளைத்தனர். இதன்போது பாதுகாப்பு பிரிவினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
இந்த தாக்குதல்கள் மற்றும் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 16 பேர் இறந்ததாக பொலிஸார் அறிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 6 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக அப்போது அறிவிக்கப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரும் ஷங்ரி லா விடுதியில் தற்கொலை தாக்குதலை நடத்தியவருமான சஹ்ரான் ஹாசீமின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் தற்போதும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. எனினும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பானவர்களுக்கு இதுவரையில் தண்டனை பெற்றுத்தரவில்லை என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட பலர் தொடர்ந்தும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த தாக்குதல் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கை அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அதில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட நல்லாட்சி அரசாங்கமே இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
எனினும் இன்றுவரையில் அவர்களுக்கு எதிராக தற்போதைய அரசாங்கத்தினால் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.
அதேநேரம், இந்த தாக்குதலின் சூத்திரதாரி என தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள நஃபர் மௌலவி அடையாளம் காணப்பட்டுள்ளார் என அண்மையில் அரசாங்கம் அறிவித்தது.
சஹ்ரானையும் அவரது ஆதரவாளர்களையும் மூளைச் சலவை செய்ததன் மூலம் தாக்குதலை நடத்த அவர் தூண்டிவிட்டார் என்பது தெரியவந்ததுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேக தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் இந்த தாக்குதலுடன் தொடர்படையவர்களுக்கு எந்த தண்டனையும் இதுவரையில் வழங்கப்படவில்லை என்பதே உண்மையாகும்.
இது இவ்வாறிருக்க தாக்குதலுக்கு உள்ளான தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் புனர்நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
ஈஸ்டர் தினத்தில் உயிரிழந்தவர்களுக்கு இம்முறை விசேட ஆராதனைகளும் தேவாலயங்களில் இடம்பெறவுள்ளதுடன், இரண்டு நிமிடங்கள் அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார்.