கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் சுகாதார அதிகாரிகள் நேற்று இரவு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக இலங்கையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ஐ.சி.யூ) அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையில், கடந்த காலங்களைப் போலவே பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் ஏனைய கடுமையான நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தவிர்க்க அனைவரும் பொறுப்போடு செயற்பட வேண்டும் என தெரிவிக்க்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறியது ஒரு கடுமையான நிலைமைக்கு வழிவகுக்கும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்த பின்னரும் சில நாட்களிலேயே பல கடற்கரை விருந்துகள் மற்றும் ஏனைய நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றும் அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது.
புத்தாண்டின்போது கொரோனா வைரஸ் சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றத் தவறியது தற்போதைய நிலைமைக்கு வழிவகுத்ததாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, அண்மையில் இலங்கையில் வைரஸின் புதிய வகைகள் கண்டறியப்பட்டதாகவும் இது தொடர்பான அறிவியல் தகவல்கள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
எனவே, முகக்கவசம் அணிவதை உறுதிசெய்யவும் சமூக தூரத்தை பராமரிக்கவும் கைகளை கழுவவும் பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
சளி அல்லது இருமலால் பாதிக்கப்பட்ட எவரும் பொது இடங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அதே நேரத்தில் தேவையற்ற பயணமும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.