துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் – 2 ஆவது நாள் விசாரணை!

259 0

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இன்று (20) இரண்டாவது நாளாக உயர்நீதிமன்றில ஆரம்பமாகியுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனெக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, முர்து பெர்ணான்டோ மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் அடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றன.

நேற்றைய தினம் (19) இந்த மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் திறந்த நீதிமன்றில் கருத்து தெரிவித்த பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பில் பல சட்டத்தரணிகள் முன்னிலையாகியுள்ளதால் அனைத்து சட்டத்தரணிகளும் தமது வாய் மூல சமர்ப்பணங்களை 20 முதல் 30 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்திக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கேபண்டார, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க, இலஙகை சட்டத்தரணிகள் சங்கம், மாற்று கொள்கை கேந்திரம், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, தகவல் தொழிநுட்ப தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவரான பொறியியலாளர் ஜீ.கபில ரேணுக பெரேரா உள்ளிட்ட தரப்பினர்களால் சுமார் 20 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், குறித்த மனுக்கள் தொடர்பில் சமர்ப்பணங்களை முன்வைக்க அனுமதியளிக்குமாறு கோரி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவாசம், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட தரப்பினர் இடைக்கால மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.