சாகும் வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த அன்னை பூபதியின் 33ஆவது நினைவு தினம்

207 0

வடக்கு- கிழக்கில் இருந்து இந்திய இராணுவத்தினை வெளியேற்றும் பொருட்டு சாகும் வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 33வது நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது.

அந்தவகையில் மட்டக்களப்பிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில், அன்னை பூபதியின் 33வது நினைவு தினம்,  இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மட்டக்களப்பு- கல்லடி, நாவலடியிலுள்ள சமாதியில் குறித்த நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதன்போது நிகழ்வின் ஆரம்பத்தில் ஈகச்சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தியதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் மட்டு.மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை தவிசாளர் சர்வானந்தா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா, மட்டு.மாநகரசபை உறுப்பினர்களான ஜெயா, இராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் நிகழ்வு நிறைவடைந்து அதன்பின்னர் வருகை தந்தவர்கள், காத்தான்குடி பொலிஸார் மற்றும் நீதிமன்ற தடை உத்தரவுடன் அப்பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.

மேலும் நிகழ்வு நிறைவடைந்ததும் அங்கு வருகைதந்திருந்த அனைவரும் திரும்பி சென்றதன் காரணமாக பொலிஸார் அங்கிருந்து திரும்பிச்சென்றுள்ளனர்.

இந்திய இராணுவ அடக்குமுறை மற்றும் பொது கோரிக்கைகள் ஆகியவற்றினை முன்வைத்து 1988.03.19 முதல் 1988.04.19 வரை மேற்கொண்ட தொடர் உண்ணா விரத போராட்டத்தில் அன்னை பூபதி உயிர்நீத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.