அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு – 3 பேர் பரிதாப பலி

316 0

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் துப்பாக்கி சூடு சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது. போலீசாரை குறிவைத்தும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
பெருகிவரும் துப்பாக்கி கலாசாரத்துக்கு எதிராக எதிர்ப்பு குரல்கள் வலுத்து வருகின்றன. துப்பாக்கி விநியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையடுத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் துப்பாக்கி சூடு சம்பவங்களை கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். ஆனாலும், துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்கின்றன.
இந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரில் உள்ள வணிக வளாகம் அருகே மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
சொந்த பிரச்சினை காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றிருப்பது போல தெரிகிறது எனவும், இதனால் பொது மக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும் குடியிருப்பு வாசிகள் குறிப்பிட்ட இடத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
ஏற்கனவே கடந்த வியாழக்கிழமை இண்டியானாபோலிஸ் நகரில் உள்ள டெலிவரி நிறுவனத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.