தமிழகத்தில் 1,800 குழந்தைகள் ‘ஹீமோபிலியா’ நோயால் பாதிப்பு

190 0

தமிழகத்தில் இதுவரை 1,800 குழந்தைகள் ‘ஹீமோபிலியா’ நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது என எழும்பூர் குழந்தைகள்நல மருத்துவமனை டாக்டர் தெரிவித்தார்.

உலக ‘ஹீமோபிலியா தினம்’ ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 17-ந்தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஹீமோபிலியா தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதுகுறித்து குழந்தைகள் நலப்பிரிவு ஹீமாட்டாலஜி துறை பேராசியர் டாக்டர் ரவிச்சந்திரன் கூறியதாவது:-
‘பொதுவாக மனிதர்களுக்கு காயத்தால் ஏற்படும் ரத்தக்கசிவு, ரத்தத்தின் உறையும் தன்மையால் சிறிது நேரத்தில் நின்றுவிடும். அவ்வாறு ரத்தம் உறைவதற்கு என நமது உடலில் 13 வகையான ரத்த உறைபொருட்கள் உள்ளன. ஆனால் ரத்த உறைபொருட்களின் குறைபாட்டால் சிலருக்கு ரத்தக்கசிவு எளிதில் நிற்பதில்லை. இதுவே ‘ஹீமோபிலியா’ எனப்படுகிறது.
உலகளவில் ஹீமோபிலியா நோய் 10 ஆயிரத்தில் ஒருவருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய்க்குச் சிகிச்சை அளிப்பதற்காக தமிழகத்தில் எழும்பூர் குழந்தைகள்நல மருத்துவமனை, தேனி, தர்மபுரி, மதுரை, சேலம் என 5 அரசு மருத்துவமனைகளில் பிரத்தியேக சிகிச்சை மையங்கள் உள்ளன.
இது பரம்பரை நோய் ஆகும். ஆண்களுக்கு மட்டும் ஏற்படக்கூடியது. தமிழகத்தில் இதுவரை 1,800 ஆண் குழந்தைகள் ஹீமோபிலியா நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போதுவரை இங்கு 160 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றன. பெரும்பாலும் இந்த நோய் மூட்டு பகுதியை அதிகம் பாதிக்கிறது.
எனவே குழந்தைகளுக்கு உடலில் ரத்தம் நிற்காமல் வடிந்தால், அவர்களது பெற்றோர் கட்டாயம் மருத்துவமனையில் பரிசோதனை செய்ய வேண்டும்’ என்றார். பேட்டியின்போது எழும்பூர் குழந்தைகள்நல மருத்துவமனை இயக்குனர் டாக்டர் எழிலரசி, மக்கள்தொடர்பு அதிகாரி கங்காதரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.