அதிக தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பதற்காக ‘இண்டியா புக் ஆப் ரெக்கார்டு’ அமைப்பு பத்மராஜனுக்கு சான்றிதழ் வழங்கி உள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர், குஞ்சாண்டியூரை அடுத்த இரட்டைபுளிய மரத்தூரை சேர்ந்தவர் தேர்தல் மன்னன் பத்மராஜன் (வயது 62).
இவர் 1988-ம் ஆண்டு முதல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், உள்ளாட்சி, சட்டசபை, பாராளுமன்றம், ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிடுவதற்காக இதுவரை 218 முறை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் எந்த தேர்தலிலும் வெற்றி பெறவில்லை.
இந்த தேர்தலில் அவர் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து எடப்பாடி தொகுதியிலும், கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயனை எதிர்த்து கேரளாவின் தர்மடம் தொகுதியிலும் போட்டியிட்டார்.
இந்தியாவில் அதிக தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என பஞ்சாப் மாநிலம், அரியானாவை சேர்ந்த ‘இண்டியா புக் ஆப் ரெக்கார்டு அமைப்பு’ பத்மராஜனை பாராட்டி சான்றிதழ் வழங்கியது. மேலும் அவரது பெயரை 2021 சாதனையாளர் பட்டியலிலும் இடம் பெற செய்துள்ளது.
உலக சாதனை புத்தகமான கின்னசில் இடம் பிடிப்பதே தனது லட்சியம் என்கிறார் பத்மராஜன்.