மியான்மரில் 23 ஆயிரம் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை – ராணுவம் நடவடிக்கை

207 0

மியான்மரில் பிப்ரவரி மாதம் முதல் தேதியில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கவிழ்த்து வைத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

மியான்மரில் பிப்ரவரி மாதம் முதல் தேதியில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கவிழ்த்து வைத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. முந்தைய ஆட்சியாளர்கள் அனைவரையும் சிறை வைத்துள்ள ராணுவம் நாட்டில் ஓராண்டுக்கு அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது.

இதற்கிடையில் ராணுவ ஆட்சி தொடங்கியது முதலே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் ராணுவம் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் இரும்புக்கரம் கொண்டு இந்த போராட்டங்களை ஒடுக்கி வருகிறது. ஆனாலும் ராணுவத்தின் இந்த அடக்குமுறைக்கு மத்தியிலும் மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

இந்த நிலையில் மியான்மரின் திங்கியன் புத்தாண்டையொட்டி 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளுக்கு ராணுவம் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளது.

இதுகுறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராணுவ தலைவர் ஆங் ஹேலிங் 173 வெளிநாட்டவர்கள் உள்பட 23 ஆயிரத்து 47 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளதாகவும், மேலும் பலருக்கு தண்டனை காலத்தை குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேசமயம் விடுதலை செய்யப்பட்டுள்ள 23 ஆயிரம் கைதிகளில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் கைது செய்யப்பட்ட ஜனநாயக ஆர்வலர்களும் அடங்குவார்களா என்கிற தகவல் வெளியாகவில்லை.‌

மியான்மரை பொறுத்தவரையில் மிக முக்கியமான பொது விடுமுறைகளின்போது கைதிகள் விடுதலை செய்யப்படுவது வழக்கம்.

ஆனால் அங்கு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதற்கு பிறகு 2-வது முறையாக மிகப்பெரிய எண்ணிக்கையில் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 12-ந் தேதி ஒற்றுமை தினத்தின்போது சுமார் 23 ஆயிரம் கைதிகள் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.