ஜனாதிபதி மிரட்டிய முதல் நபர் விஜயதாச ராஜபக்ச இல்லை என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மிரட்டிய முதல் நபர் விஜயதாச ராஜபக்ச இல்லை என தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர் ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினரையே அச்சுறுத்துகின்றார் என்றால் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு யார் பொறுப்பு எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பில் விஜயதாச ராஜபக்ச தெரிவித்த விடயங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதற்கு ஜனாதிபதிக்கு உரிமையுள்ளது என தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது பொதுமக்களின் கருத்துக்களிற்கு ஜனாதிபதி பதிலளிப்பதற்கு பல வழிமுறைகள் உள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தனது கிராம மக்கள் சந்திப்பில் பதில் அளித்திருக்கலாம், ஜனாதிபதி ஊடக பிரிவின் மூலம் பதிலளித்திருக்கலாம், அல்லது அரசாங்க தகவல் திணைக்களம் மூலம் பதிலளித்திருக்கலாம் எனவும் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்தல்கள் மிரட்டல்கள் மூலம் நாட்டை ஆள்வதற்கான அரசாங்கத்தின் முயற்சியை தோற்கடிக்கவேண்டும் என தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர் நாங்கள் அனைவரும் நாடு தொடர்பான விடயங்களையே சுட்டிக்காட்டுகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.