உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளுக்கு அவற்றின் வியாபார விரிவாக்கங்களுக்கு ஆதரவளிக்கின்ற விதத்தில் வெளிநாட்டு மூலங்களிலிருந்து குறைந்த செலவில் நிதியிடலைப் பெற்றுக்கொள்வதற்கான நெகிழ்ச்சித்தன்மையினை வழங்கும் நோக்குடன் 2021 ஏப்ரல் 9ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளினால் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு நாணயக் கடன்பாடுகள் மீது பணிப்புரைகளை விடுத்திருக்கிறது.
இப்பணிப்புரைகளின் நோக்கங்கள் யாதெனில் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளின் வெளிநாட்டு நிதியிடல் வெளிப்படுத்துகைகளினால் உருவாக்கப்படும் ஏதேனும் நிதியியல் தளம்பல்களை உறுதிப்படுத்துவதும் அத்தகைய வெளிநாட்டு நாணயக் கடன்பாடுகளுக்கான இடர்நேர்வு முகாமைத்துவக் கட்டமைப்பினை வழங்குவதுமேயாகும்.
இப்பணிப்புரைகளுக்கு முன்னதாக, இலங்கை மத்திய வங்கி தேசிய நலவுரித்துக்களைக் கொண்ட துறைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய, 5 ஆண்டுகளுக்கு மேற்பட்ட முதிர்ச்சிகளைக் கொண்டவையாக இருக்க வேண்டுமென்ற நிபந்தனைகளைப் பூர்த்திசெய்த, முன்மதியுடைய தேவைப்பாடுகளுக்கு இணங்கியொழுகின்ற உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளுக்கு, ஒவ்வொரு விடயமாக ஆராய்ந்து மொத்தச் சொத்துக்களில் 10 சதவீதம் வரையிலான தொகைக்கு வெளிநாட்டு நாணயக் கடன்களைத் திரட்டுவதற்கு அனுமதித்தது.
அநேக உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் அவற்றினது வியாபாரத் தொழிற்பாடுகளுக்கு ஒப்பீட்டு ரீதியில் குறைந்த செலவில் வெளிநாட்டுக் கடன்பாடுகளைத் திரட்டியிருப்பதனையும் கடன் மீள்கொடுப்பனவு தொடர்பில் அவற்றின் திருப்திகரமான பதிவேடுகளையும் தற்போதைய சந்தை அபிவிருத்திகளையும் பரிசீலனையில் கொண்டு பின்வரும் பண்புகளுடன் கூடிய புதிய பணிப்புரைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள், மூலதனம் மற்றும் திரவத்தன்மை மட்டங்கள், பயன்பாட்டு நோக்கம், பிணையுறுதிகளின் தன்மை மற்றும் கொடுகடன் தரமிடல் என்பன உட்பட, ஒவ்வொரு கம்பனியினதும் ஒட்டுமொத்த செயலாற்றத்தின் அடிப்படையில், மூன்று கட்டங்களின் கீழ், கம்பனியின் மொத்தச் சொத்துக்களில் 20 சதவீதம் வரையிலான தொகைக்கு வெளிநாட்டு நாணயங்களைக் கடன்படுவதற்கு அனுமதிக்கப்படுகின்றன.
கம்பனியின் மொத்தச் சொத்துக்களில் 10 சதவீதம் வரையிலான ஏதேனும் வெளிநாட்டு நாணயக் கடன்பாடுகளுக்கு, முன்னறிவித்தல் தவிர, மத்திய வங்கியின் ஒப்புதல் தேவையில்லை. கடன்பாடுகள் 10 சதவீதத்தினை விஞ்சும் வேளையில் இலங்கை மத்திய வங்கியின் முன்னொப்புதல் தேவையாகும்.
வெளிநாட்டு நாணயக் கடன்பாடுகளின் காலம் 2 ஆண்டுகளாக அல்லது கூடுதலானதாக இருத்தல் வேண்டும். இலங்கை மத்திய வங்கி, கடன்பெறுகைகளின் வெளிநாட்டுச் செலாவணி இடர்நேர்வுகளின் பாதுகாப்பிற்கு உரிமம்பெற்ற வர்த்தக வங்கியூடாக வசதியளித்த வேளையில் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் கடன்களின் வட்டிக் கொடுப்பனவுகளின் வெளிநாட்டு நாணயச் செலாவணி இடர்நேர்வினைப் பொருத்தமான பெறுதிச்சாதனங்களினூடாக முகாமைப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றன.
உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் அத்தகைய வெளிநாட்டு நாணயக் கடன்பாடுகளின் செலவினை இலங்கை மத்திய வங்கியினால் குறித்துரைக்கப்பட்ட வரையறைக்குள் பேணுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றன.
ஒட்டுமொத்தமாக, புதிய பணிப்புரைகள் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் அவற்றின் எதிர்கால வியாபாரத்தினை விரிவாக்குவதற்கு முன்மதியுடைய விதத்தில் வெளிநாட்டு மூலங்களிலிருந்து நிதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு அவற்றிற்குப் பெருமளவு நெகிழ்ச்சித்தன்மை வழங்கியிருந்ததுடன் இது பொருளாதாரத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் ஆதரவளிக்கும்.