அரசாங்கம் பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ள, கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலத்தை ஆட்சேபித்து உயர் நீதிமன்றில் 19 விஷேட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவை அனைத்தையும் ; எதிர்வரும் 19 ஆம் திகதி திங்களன்று பரிசீலனைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.
அதன்படி, எஸ்.சி./ எஸ்.டி. 4/2021, எஸ்.சி./ எஸ்.டி. 5/2021, எஸ்.சி./ எஸ்.டி. 7/2021, எஸ்.சி./ எஸ்.டி. 8/2021, எஸ்.சி./ எஸ்.டி. 9/2021, எஸ்.சி./ எஸ்.டி. 10/2021, எஸ்.சி./ எஸ்.டி.11/2021, எஸ்.சி./ எஸ்.டி.12/2021,எஸ்.சி./ எஸ்.டி.13/2021, எஸ்.சி./ எஸ்.டி.14/2021, எஸ்.சி./ எஸ்.டி.15/2021, எஸ்.சி./ எஸ்.டி.16/2021, எஸ்.சி./ எஸ்.டி.17/2021, எஸ்.சி./ எஸ்.டி.18/2021, எஸ்.சி./ எஸ்.டி.19/2021, எஸ்.சி./ எஸ்.டி. 20/2021,எஸ்.சி./ எஸ்.டி.21/2021, எஸ்.சி./ எஸ்.டி.22/2021, எஸ்.சி./ எஸ்.டி.23/2021 ஆகிய 19 மனுக்களே இவ்வாறு பரிசீலனைக்கு எடுக்கப்படவுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பிரதம நீதியரசர ஜயந்த ஜயசூரிய தலைமையில் நீதியரசர்களான புவனேக அளுவிஹார, பிரியந்த ஜயவர்தன, முர்து பெர்ணான்டோ மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் முற்பகல் 10.00 மணிக்கு உயர் நீதிமன்றின் 501 ஆம் இலக்க அறையில் மேற்படி மனுக்கள் பரிசீலனைக்கு எடுக்கப்படவுள்ளன.
இவ்வாறு பரிசீலனைக்கு எடுக்கப்படவுள்ள மனுக்கள் அனைத்தும் அரசியலமைப்பின் 120 ஆவது உறுப்புரைக்கு அமைய உயர் நீதிமன்றின் அரசியலமைப்பு சார் நியாயாதிக்கத்தினை உறுதிப்படுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இம்மனுக்களில் பிரதிவாதியாக சட்ட மா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.
குறிப்பாக இந்த 19 விஷேட மனுக்களிலும், அரசாங்கம் பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ள, கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலத்தின் 13 பிரிவுகள் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அந்த 13 பிரிவுகளும் சாதாரணமாக சட்ட மூலம் ஒன்று சட்டமாக நிறைவேற்றப்படும் படி முறையில் நிறைவேற்ற முடியாது எனவும், அதில் 7 விடயங்கள் அடங்கிய பிரிவுகளை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பும், 6 பிரிவுகளை நிறைவேற்ற பாராளுமன்றின் மூன்றிலிரண்டு விஷேட பெரும்பான்மையும் அவசியம் எனவும் ; சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, உத்தேச கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலத்தின் 6 (1) அ, ஆ, 6(1) பி, 6 (1) எ (அ) ஆகிய பிரிவுகள் அரசியலமைப்பின் எ (3) எனும் மாகாண சபைகளின் நியதிச் சட்டங்கள் குறித்த உறுப்புரையை மீறுவதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர். ;அதனைவிட ; உத்தேச சட்ட மூலத்தின் 15 (1), 16 (2), 23 (4) ஆம் பிரிவுகள் அரசியலமைப்பின் 154 (1), 154 (2) ஆம் உறுப்புரைகள் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ள கணக்காய்வாளர் நாயகத்தின் பனிகள் கடமைகள் குறித்த விதிகளையும் மீறுவதாக மனுதாரர்கள் ; குறிப்பிட்டுள்ளனர்.
அதன்படி குறித்த உத்தேச சட்ட மூலத்தின் மேற்படி 6 பிரிவுகளும் நிறைவேற்றப்பட வேண்டுமாக இருப்பின் ; அரசியலமைப்பின் 84 (2) ஆம் உறுப்புரை பிரகாரம், பாராளுமன்றின் மூன்றிலிரண்டு விஷேட பெரும்பாண்மை அவசியம் என மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனைவிட, உத்தேச சட்ட மூலத்தின் 3 (1) ஆம் பிரிவு அரசியலமைப்பின் ; பிரகாரம், பாராளுமன்றம் பகிரங்க நிதிகள் மீது கொண்டுள்ள கட்டுப்பாடு குறித்து தெரிவிக்கும் 148 ஆம் உறுப்புரை, மாகாண சபைகளின் நியதிச் சட்டங்கள் குறித்து கூறும் அரசியலமைப்பின் 154 எ (3) ; உறுப்புரையை மீறுவதாக பெரும்பாலான மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் .
அத்துடன் உத்தேச சட்ட மூலத்தின் 7 (1) ஆம் பிரிவின் ஊடாக, துறைமுக நகர ஆணைக் குழுவுக்கு வெளிநாட்டவர்களும் நியமிக்கப்படலாம் என சுட்டிக்காட்டும் ; மனுதாரர்கள் அது அரசியலமைப்பின் 3,4 ஆம் உறுப்புரைகளான மக்களின் இறைமை, இறையாண்மையை பிரயோகித்தல் ஆகிய விவகாரங்களை உள்ளடக்கிய உறுப்புரைகளை மீறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
அதே நேரம், உத்தேச சட்ட மூலத்தின் 26 (1), 27 (3) (4) ஆகிய பிரிவுகள் அரசியலமைப்பின் 12 (1), 14 (1), 14 (1) எ ஆகிய உறுப்புரைகளை மீறுவதாக கூறும் மனுதாரர்கள், உத்தேச சட்ட மூலத்தின் 40 (2) ஆம் பிரிவு அரசியலமைப்பின் 12 (1) மற்றும் 148 ஆம் உறுப்புரைகளுடன் முரண்படுவதாக குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் உத்தேச சட்ட மூலத்தின் 63 (1) (2) மற்றும் 64 (1) ஆம் பிரிவுகள் அரசியலமைப்பின் 12 (1) ஆம் உறுப்புரையை மீறுவதாக மனுதாரர்கள் குறிப்பிடுகின்றனர் இவை அரசியலமைப்பின் சமத்துவம், கருத்து மற்றும் நடமாடும் சுதந்திரம் மற்றும் பாராளுமன்றம் கிரங்க நிதிகள் மீது கொண்டுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பிலான விவகாரங்களை வரையறுக்கும் உறுப்புரைகளாகும்.
இந்நிலையில் தான் ; மேற்படி 7 உத்தேச சட்ட மூல பிரிவுகளையும் நிறைவேற்று அரசியலமைப்பின் ; 85 (1) ஆம் உறுப்புரை பிரகாரம் சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும் என மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.