சிறிலங்கா சுதந்திரக் கட்சி தொழிலாளர் தினத்தை தனித்து நடத்துவதா? அல்லது ஏனைய கட்சிகளுடன் இணைந்து நடத்துவதா? என இதுவரை தீர்மானிக்கவில்லை என்று கட்சியின் உபதலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் சில்வா தெரிவித்தார்.
எதிர்வரும் மே தினத்தை சிறிலங்கா சுதந்திரக் கட்சி தனித்து நடத்தத் தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியான நிலையில் இதுதொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினத்தை நாங்கள் கொண்டாடுவோம். மே தினத்துக்கு மிகவும் விஷேடமான கட்சி சிறிலங்கா சுதந்திரக் கட்சியாகும்.
ஏனெனில், தொழிலாளர் தினத்தை அரச விடுமுறை தினமாக்கியது, தொழிலாளர்களுக்கு பாரியளவில் வரப்பிரசாதங்களை வழங்கியது சிறிலங்கா சுதந்திரக் கட்சியாகும்.
அத்துடன் எதிர்வரும் தொழிலாளர் தின பிரதான நிகழ்வை சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களுடன் தனித்து மேற்கொள்வதா? அல்லது அரசாங்கத்தில் இருக்கும் கட்சிகளுடன் இணைந்து மேற்கொள்வதா? என இதுவரை இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை.
அதுதொடர்பாகவும் மாகாண சபைத் தேர்தல் மற்றும் தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பாகவும் அரசாங்கத்துடன் கலந்துரையாட இருக்கின்றோம். அதன் பின்னரே மே தினம் தொடர்பில் தீர்மானம் எடுப்போம்.
மேலும், மாகாண சபை முறைமைக்கு கட்சி என்ற வகையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளித்துள்ளது.
மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகளுடனே செயல்படுத்தப்படவேண்டும். மாகாண சபைகள் மூலம் மக்களுக்கு பாரிய சேவையை மேற்கொள்ள முடியுமாகின்றது.
அதனால் தற்போதுள்ள மாகாண சபை முறைமைக்கு அப்பாற் சென்று மாவட்ட மத்தியில் அதிகாரப் பரவலாக்கும் முறைமைக்கு நாங்கள் விருப்பம் தெரிவித்திருக்கின்றோம்- என்றார்.