இந்திய மீனவர்கள் சர்வதேச எல்லையைத் தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவது 50 வீதத்தால் குறைவடைந்துள்ளது- மீன்பிடித்துறை அமைச்சு

300 0

ministry-of-fisheries-and-aquatic-resources-development2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்திய மீனவர்கள் சர்வதேச எல்லையைத் தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவது 50 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கையின் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் அதேவேளை, அவர்களின் படகுகளும் கைப்பற்றப்படுவதால் அவர்களின் அத்துமீறல் குறைவடைந்திருப்பதாக மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 30 ஆண்டுகளாக சுமார் வாரத்தில் 03 நாட்களாவது இந்திய மீனவர்கள் இலங்கை எல்லையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததால், நாட்டுக்கு சொந்தமான 600 மெட்ரிக் தொன் மீன்கள் இந்திய மீனவர்களால் பிடிக்கப்பட்டுள்ளதுடன், அது இலங்கையின் மீன்பிடித் துறைக்கு பாரிய அச்சுறுத்தல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு முதல் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகள் தடுத்து வைக்கப்படுவதால் சட்ட நடவடிக்கையின் பின்னர் மீனவர்கள் மாத்திரம் விடுவிக்கப்படுவதனால் எல்லையை மீறும் நடவடிக்கைகள் குறைவடைந்துள்ளன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகள் சுமார் 114 வரை இலங்கையின் பொறுப்பில் இருப்பதாகவும் ஒரு போதும் அவற்றை விடுவிக்கப் போவதில்லை என்றும் மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலைப்படி இலங்கை மீனவர்களுக்கு எதிர்காலத்தில் பாரிய அளவான மீன்களை பிடிப்பதற்கு முடியுமான நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.