தமிழ், சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் மக்களின் நலன்கருதி விசேட போக்குவரத்து சேவை தற்போது நடைமுறைப்படுத்தப்படுவதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மொன்டி ரணதுங்க எமது செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.
போக்குவரத்து வசதிகளை அதிகரிப்பதற்காக சுமார் 2 ஆயிரம் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து விசேட போக்குவரத்து சேவை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது. தூர இடங்களுக்கான சேவைக்காக சுமார் 800 பஸகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. குறித்த பஸ்கள் உணவிற்காக நிறுத்தும் உணவகங்களில் சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது பற்றி ஆராய்வதற்கு விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, எதிர்வரும் 15ஆம் திகதியில் இருந்து 21ஆம் திகதி வரை வெளிமாவட்;டங்களில் இருந்து கொழும்பு நோக்கிய பயணங்களுக்கு மேலதிகமாக 400 பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றன.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கொழும்பு மத்திய பஸ் நிலையத்தில் விசேட வழிநடத்தல் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி மேலும் தெரிவித்தார்.