தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் தொடக்கத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 400-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் தற்போது பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நாள் ஒன்றுக்கு தமிழகத்தில் 5 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கொரோனா பரவலை தடுக்க தமிழக சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒரே தெருவில் 3 பேருக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டால் அந்த தெரு அடைக்கப்பட்டு கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படுகிறது. இந்த பகுதிகள் அனைத்தும் தடுப்புகள் அமைத்து யாரும் உள்ளே மற்றும் வெளியே போகாத வண்ணம் அடைக்கப்படும். இந்தநிலையில் தமிழகத்தில் 846 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதியாக மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் 846 தெருக்களில் 3 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 505 தெருக்களும், கோவையில் 92 தெருக்களும், செங்கல்பட்டில் 41 தெருக்களும், திருவாரூரில் 40 தெருக்களும், திருவள்ளூரில் 33 தெருக்களும், ஈரோட்டில் 20 தெருக்களும், கிருஷ்ணகிரி, நாமக்கல், சிவகங்கை, திருச்சியில் தலா 11 தெருக்களும், திண்டுக்கல், நீலகிரி, சேலத்தில் தலா 8 தெருக்களும், காஞ்சீபுரம், தேனியில் தலா 7 தெருக்களும், நெல்லையில் 6 தெருக்களும், திருப்பூரில் 5 தெருக்களும், தூத்துக்குடி, தென்காசி, ராணிப்பேட்டையில் தலா 4 தெருக்களும், கன்னியாகுமரி, நாகப்பட்டினத்தில் தலா 3 தெருக்களும், மதுரை, கள்ளக்குறிச்சியில் தலா இரு தெருக்களும் கட்டுப்பாட்டு பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளது.அரியலூர், கடலூர், தர்மபுரி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகரில் ஒரு கட்டுப்பாட்டு பகுதியும் இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாட்டு பகுதிகளில் தொடர்ந்து 7 நாட்களுக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றால் அந்த பகுதியில் அமைக்கப்படும் தடுப்புகள் அனைத்தும் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.