கிராமிய பொருளாதார அமைச்சின் நிபந்தனைக்கு அமைய வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி வவுனியா நகரில் இருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்க வேண்டும் என்ற மத்திய கிராமிய பொருளாதார அமைச்சின் நிபந்தனைக்கமைய அந்த நிலையம் அமைக்கப்படவேண்டும் என்று வவுனியா உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களுக்கு தமது இந்தக்கோரிக்கை தொடர்பில் அந்த சங்கம் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளது.
வவுனியாவில் 200 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள பொருளதார மத்திய நிலையத்திற்கான காணி வழங்கலில் மத்திய அமைச்சுக்கும் வடக்கு மாகாண சபைக்கும் இடையில் முரண்பாட்டு நிலை தொடர்கிறது.
நகரில் இருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் காணி வேண்டுமென்று மத்திய கிராமிய பொருளதார அமைச்சும், 10 கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் ஓமந்தையில்தான் காணியை வழங்க முடியும் என்று வடமாகாண சபையும் கூறி வருகின்றன.
இந்தநிலையில் வவுனியா பொருளாதார மத்திய நிலையத்திற்காக 2016 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் செலவழிக்கப்படுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி, இரண்டாம் காலாண்டும் கழிந்துள்ள நிலையில் இந்த ஆண்டின் மார்கழி மாதத்திற்குள் செலவழிக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்;டுள்ளது
பொருத்தமான காணியை வழங்காமல் விட்டால், வவுனியாவுக்கென ஒதுக்கப்பட்ட நிதி மீளப் பெறப்படுவதற்கான ஏதுக்கள் அதிகமாக உள்ளன.
எனவே,இந்தப்பொருளாதார மத்திய நிலையத்தை வேறு மாவட்டத்திற்கு செல்லவிடாமல், தாண்டிக்குளத்தில் அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வவுனியா உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கம் பொறுப்பானவர்களிடம் கேட்டுள்ளது.