ஒரு பேராசிரியன் நாட்டிற்கான நற்குடிமக்களை உருவாக்கும் நற்சிந்தனையாளர்களை உருவாக்கும் பொறுப்புடையோனாகும். ஆனால், இலங்கைத்தீவிலே சிங்கள இனத்திலே உருவாகிய பல கல்விமான்கள் இனவாதத்தைக்கக்கிச் சிங்களவர்களுக்கு இனவாதத்தை ஊட்டி வளர்த்தெடுத்துள்ளமை வரலாறு. இன்று அந்த வரலாற்றின் பக்கங்களில் தமிழரின் குருதி வழிந்தோடுவதைக் காணமுடிகிறது.
பிரித்தானிய ஆட்சிமாற்றத்தின் பின்னான இனவழிப்பு மற்றும் நிலப்பறிப்பு என்பவற்றை எதிர்த்து நடாத்தப்பட்ட மென்முறைதழுவிய போராட்டங்கள் சிங்கள இனவாத அரசுகளால் ஆயுதமுனைகொண்டு அடக்க முற்பட்டதன் விளைவாகப் பிறப்பெடுத்த ஆயுதப்போராட்டத்தின் விளைவாக ஏற்பட்ட படைவலுச் சமநிலையையடுத்து மூன்றாம் தரப்பு நடுநிலையோடு நடைபெற்ற சமாதான முன்னெடுப்புகளின்போது, சிங்கள அரசின் சார்பில் தலைமைப் பேச்சுவார்த்தையாளராக இருந்த பேராசிரியர்(ரா) காமினி லக்ஸ்மன் பீரிஸ் (ஜீ.எல்.பீரிஸ்) அவர்கள் மனித உரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்டுள்ள 46/1 ஜெனிவாத் தீர்மானங்களின் பின்னான கருத்துகளும் உரைகளும் பச்சை இனவாதத்தை வெளிப்படுத்துவதோடு, ஐ.நாவின் மனித உரிமைச் சபையினையும், அதன் கௌரவத்தையும் மற்றும் உறுப்பு நாடுகளையும் நையாண்டி செய்யும் வகையில் அமைந்துள்ளதைப் பார்க்கும்போது இவர்களைப் போன்றோரை ஒரு பேராசிரியத் தகமையோடு நோக்குதல் பொருந்துமா என்ற வினாவெழுதல் தவிர்க்க முடியாததாகிறது.
சமாதானப் பேச்சுவார்த்தையைப் பயன்படுத்திப் படிப்படியாகத் தமது படைபலத்தைப் பெருக்கியதோடு, உலகைத் தமது பக்கம் திருப்பிச் சுயரூபத்தைக் காட்டிய சிங்கள அரசின் பேச்சுவார்த்தைக் குழுவிற்குத் தலைமை தாங்கிய பேராசிரியரிடம் வேறு சிந்தனையை எதிர்பார்க்க முடியாதென்பதே மெய்நிலையானபோதும் இவர்போன்றவர்களது பேராசிரிய முகத்திரை கிழிக்கப்பட்டு, இனவாத முகம் வெளித்தெரியும்போது மட்டுமே எதிர்காலத்திலாவது சிங்களக் கல்வியாளர்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும்.
மூன்றாம் தரப்பின் முன்னிலையில் இறுதியாகத் தமிழர்தரப்போடு நடைபெற்ற அமைதிப் பேச்சுகளிலே கலந்துகொண்டு சிங்கள அரசின் பேச்சுவார்த்தைக் குழுவுக்குத் தலைமை தாங்கிய ஒரு படித்த அதுவும் ஒரு பேராசியராக இருந்த ஒருவர், பேச்சுவார்த்தையிலே முக்கிய பாத்திரம் வகுத்தவரென்பதற்கப்பால் சமாதானத்திற்காக உரையாடபட்ட மற்றும் முன்னெடுக்கப்பட்ட விவரங்களை அறிந்தவரென்றவகையில் நீண்டுசெல்லும் அமைதியற்ற இலங்கைத்தீவிலே அமைதிக்கான முயற்சிகளை முன்னெடுக்க மற்றும் சிந்திக்க வேண்டிய படித்த குமுகாயத்திலே பேராசிரியர் என்ற தகமையோடு முன்னிற்கும் ஜீ.எல்.பீரிஸ் போன்றவர்கள் ஏன் இனவாதத்தைக் கக்குகின்றார்கள். அதிலும் குறிப்பாகப் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் சிங்கள இனவாதத்தின் மற்றொரு முகமாகப் பிரதிபலிப்பதானது அவரது கல்வித் தகமைக்கு மட்டுமன்றிக் கல்வியூட்டிய பாடசாலை முதல் பல்கலைக்கழங்கள் வரை வெட்கித்தலைகுனிய வேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளார் என்பதே பொருத்தமாகும்.
தேசியப்பட்டியல் உடாக நாடாளுமன்ற உறுப்பினராகி நீதி, நிதி, அரசியல் விவகாரம், வெளி விவகாரம், மற்றும் கல்வி அமைச்செனப் பல்வேறு அமைச்சுகளில் இருந்தபோது நாட்டிலே அமைதிக்கான முன்னகர்வுகளுக்கான முனைப்புகளை செய்திருக்க வேண்டிய ஒரு பேராசிரியர் ஐ.நா. மனித உரிமைச் சபையின் தீரமானத்துக்கெதிராகக் கூப்பாடு போடுவதென்பது சரியானதா? இவரது தலைமையிலான தாய்லாந்து முதல் நோர்வே வரையான சமாதான முன்னெடுப்பும் வெற்று நாடகமென்பதை உலகறிந்தும் அறியாதிருப்பதுபோல் இருப்பதானது, தமிழினத்தை ஒரு மனித இனமாக நோக்கவில்லையோ என்று எண்ணத்தோன்றுகின்றது.
அனைத்தையும் கடந்து ஒரு பேராசிரியரின் வழிகாட்டுதல் என்பது தன்னினத்தையும் காத்து மற்றைய இனங்களையும் நேசிக்கும் பண்புடையதாக இருக்க வேண்டிய நிலையில் ஜீ.எல்.பீரிஸ் என்ற பேராசிரியர் ஒரு பச்சை இனவாதியாக இருப்பதை வெளிச்சத்துக் கொண்டுவருவது மிகவும் அவசியமானதாகும். கற்றறிந்த குமுகாயத்தினதும், மானுடத்தினதும் மேன்மையாகக் கருதப்படும் மனிதத்தை மதிக்கும் பாங்கை இனத்துவ அடிப்படையில் மறுதலிக்கும் இவர்போன்றோரை பேராசிரியரென்று அழைப்பதானது ஏனைய பேராசியர்களுக்கும் இழுக்காகும். எனவேஇ இலங்கை பேரசிரிய குமுகாயமும்இ உலக பேரசிரிய குமுகாயமும் சிங்கள் இனவாதத்தைக் கக்கி இலங்கைத்தீவிலே தொடர்ச்சியான இனமோதலுக்கும் அழிவுக்கும் தூபமிடும் காமினி லக்ஸ்மன் பீரிஸ் போன்றவர்களை ஒரு பேராசிரியராக ஏற்பதைத் தவிர்த்து முதலில் நிராகரிப்பதனூடாகவும், இதுபோன்ற இனவாதிகளை அரசியலரங்லிருந்து அகற்றுவதனூடாகவும் மட்டுமே இனங்களிடையே அமைதியையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்தமுடியும்.
மா.பாஸ்கரன்
யேர்மனி