ஈழத் தமிழர்களின் இதயங்களில் வாழும் இறுதி போரின் ஒப்பற்ற சாட்சியம் மன்னார் மறை மாவட்ட ஓய்வு நிலை ஆயர் வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை தனது 80 ஆவது வயதில் இன்று(1) காலை 06.30 மணிக்கு இயற்கை எய்தினார்.
”மக்கள் சேவையே மகேசன் சேவை” என்று வாழ்ந்த ஆண்டகை இன்று எம்மை விட்டு பிரிந்து விட்டார். இவர் ஒரு கிறிஸ்தவ பாதிரியாக மட்டும் செயற்படவில்லை ஈழத் தமிழ் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் தந்தையாகவும் விளங்கினார்.
ஈழ விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை விளங்கிக் கொண்ட ஆண்டகை தனது இறுதி மூச்சுவரை தமிழ் மக்களின் உரிமைக்காக உலகம் அதிர உரக்க குரல் கொடுத்தார்.
கிறிஸ்தவ மத குருமார்கள் குறிப்பாக கத்தோலிக்க மத குருமார்கள் ஆரம்பக்காலம் முதல் தமிழ்த்தேசிய அரசியலுக்கு வலுவான பங்களிப்பைச் செய்து வந்தனர்.
அருட் தந்தை சிங்கராஜர் நீண்ட காலம் சிறிலங்காவின் சிறை வாசம் அனுபவித்திருந்தார்.
வன்னி மக்கள் அனைவராலும் அன்பாகவும் செல்லமாகவும் “கிளி பாதர்” என்று அழைக்கப்ட்ட அருட் தந்தை கருணாரட்ணம் அடிகளார் தமிழ் மக்களின் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். இதனால் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார்.
இதை விட பல கத்தோலிக்க மத குருமார்கள் சிறிலங்கா படையினரால் கொல்லப்பட்டிருக்கின்றனர். அத்துடன் பலர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கபட்டுள்ளனர்.
இறுதி யுத்தத்தின் முடிவில் வெள்ளை கொடியுடன் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்தை அருட்தந்தை பிரான்சிஸ் என்ன ஆனார் என்பது எங்களின் கேள்வியே.
வணக்கத்திற்குரிய மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை உலகமே வியக்கத்தக்களவிற்கு பல் இன நல்லிணக்கத்திற்கு பங்களிப்பைச் செய்தார்,
குறிப்பாக இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிட்டு ஐக்கிய நாடுகள் சபையில் முறையிட்டார். இதன் மூலம் சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கு அவர் சிம்ம சொப்பனமாக விளங்கினார்.
தமிழ் சிவில் சமூக அமையத்திற்கு அவர் தலைமை தாங்கியமை அனைவரும் அறிந்ததே. தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து தமிழ்த்தேசிய சபை ஒன்றை உருவாக்குவதற்கும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் சொல்லில் அடங்காதவை.
வணக்கத்திற்குரிய மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை ஈழத்தமிழ் மக்களிற்கு ஆற்றிய சேவை என்றும் போற்றுதலுக்குரியதுடன் எம்மை தலைவணங்கவும் செய்கின்றது.
தமிழ் மக்களிற்கான நீதி கிடைக்கவில்லை என்ற வேதனையுடனேயே நீதிக்கான குரல் தேவனின் அழைப்பை ஏற்றுக்கொண்டது.