யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நடாத்தப்பட்ட 150வது பொலிஸ் தினத்தை முன்னிட்ட நடமாடும் சேவைகள் நேற்றுடன் நிறைவுபெற்றன. தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடமாடும் சேவையில் இறுதிநாள் நிகழ்வுகள் பன்னாலை கற்பக விநாயகர் ஆலய முன்றலில் நேற்றிரவு இடம்பெற்றது.தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யு.எல்.டி.சுமித் பிரியந்த தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஏ.சரத்குமார, காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஏ.ஆர்.மாசிங்க, தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி அதிபர், தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், அரச உத்தியோகத்தர்கள், பொலிஸ் அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பொலிஸ் நடமாடும் சேவையின் போது தெல்லிப்பழை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பாடசாலைகள் ரீதியாக மாணவர்கள் இடையே நடாத்தப்பட்ட அழகியல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.