சர்ச்சைக்குரிய எண்ணெய் கொள்கலன்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

405 0

நீதவான் நீதிமன்ற உத்தரவை மீறி தங்கொட்டுவ பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட தேங்காய் எண்ணெய் கொள்கலங்கள் இரண்டையும் சுங்க திணைக்களத்திடம் ஒப்படைப்பது குறித்து விசாரணை நடத்துமாறு மாரவில நீதவான் நீதிமன்றம் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 29 ஆம் திகதி இரவு தங்கொட்டுவ பிரதேசத்தில் இருந்து சந்தேகத்திற்கு இடமான இரு தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் கண்டுப்பிடிக்கப்பட்டதுடன் அவற்றை பொலிஸார் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

இது தொடர்பில் தங்கொட்டுவ பொலிஸார் கடந்த 30 ஆம் திகதி மாரவில நீதிமன்றத்திற்கு அறிக்கையிட்டிருந்தனர்.

இதன்போது இரு கொள்கலன்களையும் நீதிமன்ற பாதுகாப்பில் வைத்து இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தி அறிக்கை பெற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் நேற்று (31) இரு கொள்கலன்களையும் சுங்க திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது குறித்த மனு நேற்று பிற்பகல் மாரவில நீதிமன்றத்தில் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதவான் ரபித்த அபேசிங்க குறித்த கொள்கலன்கள் குறித்த இரசாயன பகுப்பாய்வு அறிக்கையை பெற்றுக் கொண்டிர்களா? என தங்கொட்டுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் வினவினார்.

இதற்கு பதிலளித்த அவர், இரசாயன பகுப்பாய்வு அறிக்கையை பெற்றுக் கொள்ளவில்லை எனவும் இரு கொள்கலன்களையும் சுங்க திணைக்களத்திடம் ஒப்படைத்தாக பதிலளித்தார்.

இதன்போது ஏன் நீதிமன்ற உத்தரவை செய்ற்படுத்தவில்லை என வினவிய நீதவான் சுங்கத்தால் பாதுகாத்து பராமறிக்க முடியாத பொருளை மீண்டும் சுங்கத் திணைக்களத்திற்கே பாரப்படுத்தியமை தவறு என கூறியுள்ளார்.

எனவே, இரு கொள்கலன்கள் தொடர்பில் மீண்டும் இரசாயன பகுப்பாய்வு அறிக்கையை பெற்று வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் அறிக்கையை ஏப்ரல் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.