மட்டு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரை கைது செய்யும் விடயத்தில் சட்டம் உரிய முறையில் நிலை நாட்டப்பட வில்லை என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனினும் கடந்த ஆட்சியில் ஏற்பட்ட சட்ட சீர்கேடுகள் நல்லாட்சியிலும் தொடர்வது வேதனை தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.பதுளை வீதியிலுள்ள பன்குடாவெளியில் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள தனியாருக்கு சொந்தமான காணிக்குள் கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் திகதி அத்துமீறி நுழைந்த மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி குறித்த காணியில் பௌத்த விகாரை இருந்ததாக தெரிவித்து காணி உரிமையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தனக்கு கொலை அச்சுறுத்தில் விடுத்ததாக தெரிவித்து மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கடந்த நவம்பர் மாதம் 17 ஆம் திகதி முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்திருந்தார்.
சுமணரத்ன தேரர் செய்த முறைப்பாடு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரிடம் விசாரணை செய்வதற்காக கரடியனாறு பொலிஸ் நிலையத்தினால் ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில்இவ் நாடாளுமன்ற உறுப்பினர் நேற்று (17) பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகினார்.
இதேவேளை, குறித்த காணி உரிமையாளரான த.யோகமலரும் சம்பவம் தொர்பாக சாட்சியம் அளிப்பதற்காக கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.