சிங்கள பௌத்தர்களுக்கு உரித்தான அனைத்து உரிமைகளும் நாட்டில் வாழும் சிறுபான்மை இனங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்கம் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டி பூஜாப்பிட்டிய – ஹம்பத்தென்ன பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும போதே அவர் இதனை கூறியுள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சி அடிப்படைவாத கட்சியல்ல. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருக்கும் வரை நாட்டில் சிறுபான்மை இனத்தவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்பட இடமளிக்காது.
சகல இனங்களுக்கும் சமவுரிமை கிடைக்க வேண்டும் என்பது எமது கட்சியின் நோக்கம். அரசாங்கம் கவிழ்ந்து விடும் என சிலர் எதிர்பார்த்துள்ளனர்.எனினும் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய பிரதான கட்சிகள் இணைந்து அமைத்துள்ள பலமான அரசாங்கம் எந்த வகையிலும் கவிழாது.
வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் இருந்தே அரசாங்கத்தின் பயணத்தை தடுத்து நிறுத்த எதிர்க்கட்சி முயற்சித்தது. நாடாளுமன்றத்திலும் அவர்கள் எதிர்ப்பை வெளியிட்டனர். இறுதியில் வரவு செலவுத்திட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில் நிறைவேற்றப்பட்டது.
நாடு முழுவதும் அவர்கள் எதிர்ப்புகளை உருவாக்கி வருவதால் அவ்வாறு செய்தோம். முதலீடு செய்யப்பட உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் ஒன்றை உருவாக்கினர்.
ஜனாதிபதியும் பிரதமரும் வெளிநாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி நாட்டுக்கு பெருமளவிலான முதலீடுகளை கொண்டு வர தலையிட்டு செயற்பட்டு வருகின்றனர். இதனடிப்படையில், ஹம்பாந்தோட்டையில் இருந்து மொனராகலை வரை 500 தொழிற்சாலைகளை நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த அரசாங்கத்தின் நிர்வாக சீர்கேடு காரணமாக அரசின் வருமானத்தை கூற வெட்கமாக இருக்கின்றது. அரசாங்கத்தின் வருட வருமானத்தில் கடன் தவணை மற்றும் வட்டியை செலுத்தும் முடியாமல் உள்ளது.இந்த கடனுடன் எம்மால் முன்னோக்கி செல்ல முடியாது. இப்படியான நிலையிலேயே சீன அரசாங்கம் இலங்கையில் 1.5 பில்லியன் டொலர்களை முதலீடு செய்ய முன்வந்துள்ளது.
சீனா இலங்கையில் உற்பத்தி செய்யும் பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும். இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு குறைந்த வரியை அறவிடுவது தொடர்பாக இந்தியாவுடன் உடன்படிக்கை கையெழுத்திடப்பட உள்ளது.
இந்தியாவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இலங்கை அதிகளவான வருமானத்தை ஈட்ட முடியும். சீனா செய்ய உள்ள இந்த முதலீட்டின் ஊடாக ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள முடியும்.இந்த வேலைத்திட்டத்தை சீர்குலைக்க சிலர் முயற்சித்து வருகின்றனர்.எனினும் அரசாங்கத்தின் எதிர்கால திட்டத்தை சீர்குலைக்க இடமளிக்க போவதில்லை எனவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.