வெலிவேரிய ரத்துபஸ்வல பிரதேசத்தில் 2013ஆம் ஆண்டில் இராணுவம் நடத்திய துப்பக்கிச் சூட்டு சம்பவத்திற்கு தானே பொறுப்பு என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கராந்தெனிய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.ஒரு தொலைக்காட்சி ஹம்பாந்தோட்டை சம்பவத்தை ஒளிப்பரப்பாமல், இன்னும் ரத்துபஸ்வல சம்பவத்தை ஒளிப்பரப்பி வருவதை நான் பார்த்தேன்.
யார் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும் எனக் கூறி அதனை ஒளிப்பரப்பி வருகின்றனர். நான் அந்த சம்பவத்திற்கு பொறுப்புக் கூற வேண்டும் என்ற காரணத்தினாலேயே தோல்வியடைந்தேன்.
ஊடகவியலாளர்களுக்கு நடந்ததை அனைவரும் அறிவார்கள். ஊடகவியலாளர் தற்போது இரவில் சிறப்பாக உபசரிக்கப்படுகின்றனர் எனவும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெலிவேரிய ரத்துபஸ்வல பிரதேசத்தில் சுத்தமான குடிநீர் கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது இராணுவம் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர்.