தற்போது சந்தைக்கு புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் எதிர்வரும் நாட்களில் தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிக்கக்கூடும் என அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுதவிர, எதிர்வரும் பண்டிகை காலத்தில் நாட்டில் தேங்காய் எண்ணெய்க்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் இறக்குமதி செய்யப்பட்ட 13 தேங்காய் எண்ணெய் கொள்கலன்களில் எப்லாடொக்சின் எனப்படும் புற்றுநோயை ஏற்படுத்த கூடிய இரசாயனம் காணப்படுவதாக தெரியவந்தமையை அடுத்து சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவினரால் அவற்றை மீள் ஏற்றுமதி செய்வதற்கு அண்மையில் பரிந்துரை முன்வைக்கப்பட்டது.
இதற்கிடையில் குறித்த தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படவில்லை என்பதை உறுதிபடுத்தி கொள்வதற்காக நுகர்வோர் அதிகார சபை அவற்றை இறக்குமதி செய்த மூன்று நிறுவனங்களின் களஞ்சியசாலைகளுக்கு முத்திரையிடும் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தது.
இந்த சூழ்நிலையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஏனைய தேங்காய் எண்ணெய்யை சந்தைக்கு விநியோகிக்கும் செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளன.
இதன் காரணமாக பண்டிகை காலத்தில் தேய்காய் எண்ணெய் விலை அதிகரிக்க கூடும் என அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் இணைப்பாளர் புத்திக டி சில்வா தெரிவித்தார்.
தற்போதும் சந்தையில் தேங்காய் எண்ணெய் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்