யேர்மனியில் ஈழத் தமிழ் உறவுகள் சிறிலங்காவுக்கு நாடுகடத்தப்படுவதற்கு எதிராக கண்டனம் தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் அவர்களை தற்காலிகமாக தங்க வைத்திருக்கும் சிறையின் முன்பாக (Büren) பல்லின மனிதநேய அமைப்புகள் , தமிழ் மக்கள் என பல நூற்றுக்கணக்கா னவர்கள் அணிதிரண்டனர்.
சிங்கள பேரினவாத அரசால் இன்றும் பல்வேறு முறையில் தாயகத்தில் கட்டமைப்புசார் இனவழிப்பு நடந்துகொண்டிருக்கும் தருணத்திலும் , அத்தோடு ஐநா மனிதவுரிமை ஆணையாளரின் அறிக்கையின் அடிப்படையில் சிறிலங்காவில் மனிதவுரிமை நிலைமைகள் கவலையளிக்கின்றது என்பதை யேர்மன் மனிதவுரிமை ஆணையாளர் தெரிவித்ததற்கு பின்னரும் யேர்மன் அரசு இவ்வாறான மனிதநேயமற்ற முன்னெடுப்பை செய்வதை கண்டித்து பல்வேறு மனிதநேய அமைப்புகள் தமது கருத்தை தெரிவித்திருந்தனர்.
தமிழர்களை நாடுகடத்த வேண்டாம் என கோசங்கள் முழங்கியவாறு இக் கண்டன நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்ணீர் மல்க தமது உறவுகளை காப்பாற்றும்படி கதறியழுதனர்.
Pforzheim சிறையில் உள்ளவர்கள் ஆர்ப்பாட்டத்தை ஜன்னல் ஊடாக கவனித்ததோடு இறுதியில் கலந்துகொண்டவர்களை நோக்கி ‘ வந்தது சந்தோசம் ‘ என நன்றி கூறியது அனைவரின் மனதையும் நெகிழ வைத்தது.
இறுதி நொடி வரை சிறையில் உள்ளவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் வகையில் பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் , மனிதவுரிமை சார்ந்த அமைப்புகளுக்கும் தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டு தொடர்புகளை யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை பேணி வருகின்றது. அத்தோடு நேற்றைய தினம் தமிழ் இளையோர் அமைப்பினரால் யேர்மனியில் உள்ள பல்வேறு ஊடகங்களையும் , அரசியல்வாதிகளையும் நோக்கி மின்னஞ்சல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
நாளைய தினம் யேர்மன் தலைநகர் பேர்லினில் உள்ள உள்த்துறை அமைச்சுக்கு முன்பாகவும் சமநேரத்தில் மத்திய மாநிலத்தின் பாராளுமன்றத்தின் முன்பாகவும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.