சுவிட்சர்லாந்தில் தஞ்சக் கோரிக்கை மறுக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கை நிறுத்தப்படமாட்டாது என அந்நாட்டின் குடியேற்றவாசிகளுக்கான கூட்டாட்சி அரசின் செயலகம் (State Secretariat for Migration – SEM) தெரிவித்துள்ளது.
அகதிகளைத் திருப்பி அனுப்புபுவதில்லை என்று பொதுவான எந்தவொரு முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அந்நடவடிக்கை தொடரும். தொற்று நோய் காரணமாக அது தாமதமாகலாம் எனவும் குடியேற்றவாசிகளுக்கான கூட்டாட்சி அரசின் செயலகம் கூறியுள்ளது.
“தற்போதைய நிலைமையின் அடிப்படையில் இலங்கையில் பொதுவான ஆபத்து இருப்பதாகக் கருதுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. அங்கு முழு இனக் குழுமங்களும் அபாயத்தில் இல்லை. எனவே சுவிஸில் ஒழுங்கான வதிவிட அனுமதி இன்றித் தங்கி இருக்கின்ற இலங்கைப் பிரஜைகளைத் திருப்பி அனுப்புகின்ற நடைமுறைகளில் மாற்றம் இருக்காது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொருவருடைய புகலிட விண்ணப் பங்களும் தனித்தனியே கவனமாக ஆராயப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ்தொற்று நோய் காரணமாக அவர்களைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் தாமதமாகலாம். ஆனால் பொதுவான ஒரு முடிவாக அது நிறுத்தப்பட மாட்டாது. என கூட்டாட்சி அரசின் குடியேற்றவாசிகளுக்கான செயலகம் தெரிவித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இந்த வார ஆரம்பத்தில் இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நீதி குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான செய்தி வெளியாகியுள்ளது.
மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் தனது கவலைகளை எழுப்பியது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உயர் ஸ்தானிகர் அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை அமல்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் சுவிஸ் கோரிக்கை விடுத்து.
இதேவேளை, இலங்கையில் மோசமடைந்துவரும் மனித உரிமை மீறல்களைக் கருத்தில் கொண்டு இலங்கைத் தமிழ் அகதிகளை திரும்பி அனுப்பும் முடிவைக் கைவிடுமாறு சுவிஸ் அகதிகள் பேரவை (OSAR) சுவிஸ் அதிகாரிகளை கடந்த மாதம் கேட்டுக் கொண்டது.
இலங்கையில் மோசமடைந்துவரும் நிலைமையை கவனமாக ஆராய்ந்து, அதற்கேற்ப தஞ்சம் வழங்கும் நடைமுறைகளை மாற்றியமைக்குமாறு குடியேற்றவாசிகளுக்கான சுவிஸ் கூட்டாட்சி அரசின் செயலகத்திடம் சுவிஸ் அகதிகள் பேரவை கோரிக்கை விடுத்தது. அதுவரை இலங்கை அகதிகளை நாடுகடத்தும் முறற்சிகளை இடைநிறுத்துமாறும் வலியுறுத்தப்பட்டது.
இலங்கையில் மோசமடைந்து வரும் நிலைமை குறித்து சுவிஸ் அகதிகள் பேரவை மிகவும் அக்கறை கொண்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் இலங்கை அகதிகளுக்கு தஞ்சம் அளிக்கும் நடைமுறைகளை மீளாய்வு செய்ய வேண்டும் என்று ஐ.நா. அறிக்கை வெளிப்படையாக பரிந்துரைக்கிறது. இதனை நாமும் ஆதரிக்கிறோம் எனவும் சுவிஸ் அகதிகள் பேரவையும் சுவிஸ் கூட்டாட்சி அரசுக்குத் தெரிவித்திருந்தது.
இவ்வாறான நிலையிலும் தஞ்சக் கோரிக்கை மறுக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கை நிறுத்தப்படமாட்டாது என சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது.
ஜேர்மனியில் தஞ்சம் கோரிய 100-க்கும் அதிகமான இலங்கைத் தமிழ் அகதிகள் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவா்களை எதிர்வரும் 30-ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்த துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறான நிலையில் சுவிஸ் அரசாங்கமும் அகதிகளைத் திரும்பி அனுப்பும் முடிவில் மாற்றம் இல்லை எனக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.