உலகம் சுற்றுகிறது தீர்மானம்! தலையை சுற்றுகிறது அறிக்கைகள்!

353 0

முள்ளிவாய்க்கால் உறைநிலைக்குச் சென்றபின்னர் போர்க்குற்றம் தொடர்பான ஆவணங்கள், வாய்மூலங்கள், சத்தியப்பிரமாணங்கள் தமிழர் தரப்பால் பல நாடுகளில் சேகரிக்கப்பட்டன. இன்னும் தொகுக்க வேண்டியவை நிறைய உண்டு. இவற்றைத் தாமதமின்றிச் சேகரித்து மனித உரிமை ஆணையாளரிடம் கையளிக்க வேண்டிய காலம் உருவாகியுள்ளது. இதனைச் செய்யத் தவறின் 46:1 அர்த்தமில்லாது போய்விடும். 2022 செப்டம்பரில் ஜெனிவாக் கதவும் மூடும் நிலை ஏற்படலாம்.

ஒரு மாதத்துக்குள் மூன்று நான்கு சிறுசிறு திருத்தங்களுக்குட்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம், ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இந்த மாதம் 23ம் திகதி நிறைவேற்றப்பட்டது.

பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்சிலட் அவர்களின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட அத்தனை அம்சங்களும் தீர்மானத்தில் இடம்பெறவில்லை. ஆனால், இலங்கை அரசு அடியோடு விரும்பாத சில விடயங்கள் இறுதி வரைபில் இணைக்கப்பட்டன.

இந்தத் தீர்மானத்தையொட்டி சமூக ஊடகங்களில் இடம்பெறும் தவறான இரண்டு சொற்பதங்களை முதலில் நோக்க வேண்டும். இலங்கைக்கு எதிரான தீர்மானம், வாக்களிப்பு வெற்றி பெற்றது – இவ்விரு சொற்பதங்களுமே இங்கு கரிசனைக்குட்பட்டவை.

தீர்மானத்தை முன்மொழிந்த பிரித்தானிய அரச பிரதிநிதி தமது உரையின் ஆரம்பத்திலேயே, இது இலங்கைக்கு எதிரான தீர்மானம் அல்ல என்று அழுத்திக் குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் குறிப்பிடுவதுபோல, இலங்கைக்கு எதிரான தீர்மானம் என்றால், இதனை தாங்கள் ஏற்கவில்லையென்றும், முழுமையாக நிராகரிப்பதாகவும் இலங்கைத் தரப்பு கூறுவதை ஏற்றுக்கொள்ள நேரிடும். எனவே, இலங்கைக்கு எதிரான தீர்மானம் என்பது தவிர்க்கப்பட வேண்டியதும் உண்மைக்குப் புறம்பானதும்.

அடுத்தது, தீர்மானம் வெற்றி என்பது முற்றிலும் தவறான சொற்பதம். வெற்றி தோல்வி சொல்வதற்கு இது தேர்தல் அல்ல. சர்வதேச அரங்கில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் பெரும்பான்மையால் நிறைவேறியது என்று குறிப்பிடுவதே பொருத்தமாகும்.

இத் தீர்மானத்தை நிராகரிப்பதாகக் கூறினாலும், சர்வதேச நியமங்களுக்குட்பட்டு இதனை அமல் செய்யும் கடப்பாடு இலங்கைக்கு (விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்) உள்ளது.

இந்தப் பின்னணியில் ஜெனிவா விடயங்களை அணுகுவதே இன்றைய பத்தியின் நோக்கம். தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னைய சில நாட்களாக இலங்கையைத் தளமாகக்கொண்ட இரு தரப்பும் ஏட்டிக்குப் போட்டியாக ஒரு கருத்தை வெளியிட்டு வந்தன.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர், அமைச்சின் செயலாளர் உட்பட கோதபாய தரப்பு அரசியலாளர்கள் இந்தியா தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்குமென மீண்டும் மீண்டும் கூறி வந்தனர். இதனூடாக இந்தியாவை அவ்வாறு செய்யத் தூண்டும் ஒரு செயற்பாடாகவும் காணக்கூடியதாக இருந்தது.

ஆனால், தமிழர் தரப்பில் கூட்டமைப்பின் பிரதிநிதி சுமந்திரன், தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களிக்குமென அதீத நம்பிக்கை வெளியிட்டு வந்தார். இந்தியத் தரப்பு இரகசியமாக தமக்கு இதனைக் கூறியதுபோன்று இவர் கருத்துக் கூறிய பாணி தென்பட்டது.

சில பொதுவான தரப்புகள் இந்தியா வாக்களிப்பில் கலந்து கொள்ளாதென கூறிவந்தனர். வாக்களிப்பு இடம்பெறுவதற்கு ஒரு மணித்தியாலத்துக்கு முன்னர்கூட இந்தியா தனது நிலைப்பாட்டை நேரடியாக வெளிக்காட்டவில்லை. ஜெனிவாவில் இந்தியப் பிரதிநிதி உரையாற்றும்போது பூனை சாக்குக்கு வெளியே வந்தது.

இந்தியா இரு தரப்பையும் நம்ப வைத்து ஏமாற்றிக் கைவிட்டபோதிலும், இரு தரப்பும் அதை தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொண்ட அரசியல் சித்து விளையாட்டை என்னென்று சொல்லலாம். இந்திய விவகாரத்தில் வழமையான அரசியல் பம்மாத்து ஆரம்பமானது. இதில் முக்கியமானது இந்தியா நடுநிலைமை வகித்தது என்று இரு தரப்பும் சொல்லிக் கொண்டது. இதனாற்போலும் இரு தரப்புமே சமவேளையில் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து அறிக்கைகள் விட்டன.

இலங்கை அரச சார்பில் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இந்தியாவுக்கு வாக்களிப்பில் பங்குபற்றாமைக்கு நன்றி கூறினார். கூட்டமைப்பின் சுமந்திரன் மூன்று காரணங்களை முன்வைத்து இந்தியாவுக்கு நன்றி கூறினார்.

தமிழ் மக்களுக்கு ஆதரவாக இந்தியா செயற்பட்டது, பதின்மூன்றாம் திருத்தத்தின் பிரகாரம் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வைக் கோரியது. மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு வேண்டியது என்பவற்றுக்காக இந்தியாவுக்கு நன்றி என்றார் இவர்.

சுமந்திரனின் நன்றி போதாது என்று எண்ணியோ என்னவோ, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் தமது பங்குக்கு ஓர் அறிக்கை வெளியிட்டார். ஜெனிவாவில் இந்தியா குறிப்பிட்ட விடயங்களை இலங்கை அரசு முழுமையாக செயற்படுத்த வேண்டுமென்பது இவரது அறிக்கை.

போர்க்குற்றம், பொறுப்புக்கூறல், சர்வதேச நீதிவிசாரணைப் பொறிமுறை என்ற ஜெனிவா அம்சங்களில் எதையுமே குறிப்பிடாத இந்தியா, வழமையான 13 தாலாட்டையே இங்கும் பாடிவிட்டு ஜெனிவாவிலிருந்து தப்பி விட்டது. ஜெனிவாவுக்கும் 13க்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையென்பது சம்பந்தனுக்குக்கூட புரியவில்லை.

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு முன்னின்று இலங்கைக்கு உதவி வழங்கிய 32 நாடுகளில் முதன்மையானது இந்தியா. ஆயுதம், இராணுவம்;, புலனாய்வு, காட்டிக்கொடுப்பு, வக்காலத்து என்று சகல வளங்களையும் இந்தியா தந்ததென்று இலங்கை எத்தனை தடவை குறிப்பிட்டிருக்கும்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஜெனிவா தீர்மானத்தின் வழியாக இந்தியாவை காப்பாற்றிவிட்டது என்று குற்றம் சுமத்தியுள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரனிடமிருந்து இதுவரை எதுவும் வரவில்லை. ஆற அமர்ந்து கேள்வி-பதில் வடிவில் இன்னொரு கோணத்தில் இவரது அறிக்கை நிச்சயமாக வெளிவரும்.

மூவேந்தர்களான சேர சோழ பாண்டியர்கள் தங்களுக்குள் மோதுப்பட்ட வரலாறை, இன்று தமிழீழ மண்ணில் மூன்று தமிழ்த் தேசிய கட்சிகளும் பின்பற்றும் கைங்கரியம் இடம்பெறுகிறது.

இன்றைய நிலையில் ஆகக்குறைந்தது தமிழர் நிலம், தமிழர் உரிமை, தமிழர் எதிர்காலம் என்ற அடிப்படையில் இவர்கள் மூவரும் இணைந்து செயற்படாதவிடத்து இலங்கைக்கு வெற்றி மேல் வெற்றியே கிடைக்கும்.

ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றல் தொடர்பான அதிசயக் கணக்கொன்றை இலங்கை அரசு வெளியிடுமென எதிர்பார்த்தது பொய்யாகவில்லை. 47 நாடுகளில் 22 தீர்மானத்தை ஆதரித்தன. 11 எதிர்த்தன. 14 வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. தீர்மானம் 11 வாக்குகளால் நிறைவேறியதென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

நாங்கள் அறிந்த எண்கணிதம், அட்சரகணிதம், கேத்திரகணிதம், மனக்கணிதம் என்பவற்றுக்கு அப்பால் அரசியல்கணிதம் என்றும் ஒன்று இருப்பதை இலங்கை அறியத்தந்துள்ளது. அதாவது, 47 நாடுகளில் 22 மட்டுமே தீர்மானத்தை ஆதரித்ததால் 25 நாடுகள் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை என்பதே கோதபாய தரப்பின் அரசியல் கணக்கு. எத்தனை காலம்தான் சிங்களச் சனங்களை இப்படி ஏமாற்றப் போகிறார்களோ?

ஜெனிவாவில் இப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மான இலக்கம் 46:1. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்பது இதன் தலைப்பு வாசகம்.

2015ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இலங்கை அரசுகள் அலட்சியப்படுத்தி வந்தமையினாலேயே புதிய தீர்மானம் வந்தது என அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் சுட்டியுள்ளார்.

தங்கள் நாட்டினால் இணைஅனுசரணை வழங்கிய பொறுப்புக்கூறலை, அது வேறு அரசு (மைத்திரி-ரணில்), இது வேறு அரசு (ராஜபக்சக்கள்) என்று காரணம் கூறி தீர்மானத்தை இலங்கை அரசு நிராகரிக்கிறது. போர்க்குற்றம் இடம்பெற்ற காலத்தில் ஜனாதிபதியாக இருந்தவர் மகிந்த ராஜபக்ச. போர்க்குற்றம் புரிந்த ராணுவத்தினரையும் படையினரையும் வழிநடத்தியவர் அப்போது பாதுகாப்புச் செயலாளராகவிருந்த தற்போதைய ஜனாதிபதி கோதபாய ராஜபக்ச.

எனவே, பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறைகளை நிறைவேற்ற வேண்டிய தார்மிகப் பொறுப்பு ராஜபக்சக்களுக்கே உண்டு. இதனை மேலும் விளக்கமாகக் கூறுவதானால், ராஜபக்சக்களையே முதலில் குற்றவியல் விசாரணைக் கூண்டில் ஏற்ற வேண்டும். இதனைத் தெரிந்து கொண்டதால்தான் இவர்கள் இத்தீர்மானத்தை முழுமையாக நிராகரிக்கின்றனர்.

இப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் இரு விடயங்கள் பல தரப்பினரதும் ஆழ்ந்த கவனத்தைப் பெற்றுள்ளன. தொடர்ந்து இடம்பெறும் மனித உரிமை மீறல்கள், சட்டத்துக்குப் புறம்பான செயற்பாடுகள் விசாரிக்கப்பட வேண்டும். இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக தகவல் மற்றும் ஆதாரங்களைச் சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல், பாதுகாத்தல், பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கான சாத்தியமான உத்திகளை உருவாக்குதல் என்பவை மனித உரிமை ஆணையாளரிடம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்கென 12 அதிகாரிகளை ஈடுபடுத்த 2.8 மில்லியன் டாலர்களை ஜெனிவா பேரவை வழங்குகிறது. இவ்வருடம் செப்டம்பரில் வாய்மூல அறிக்கையொன்றினை ஆணையாளர் பேரவையில் சமர்ப்பிக்க வேண்டும். அடுத்த ஆண்டு மார்ச், செப்டம்பர் அமர்வுகளில் உறுப்பு நாடுகளின் விவாதத்துக்கென பூரண அறிக்கையை ஆணையாளர் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆணையாளர் பச்சிலட் அவர்கள் சிலி நாட்டின் ஜனாதிபதியாக இரு தடவை பணியாற்றிய மனித உரிமை செயற்பாட்டாளர். இவரது தந்தை சிறையில் கொல்லப்பட்டவர். இவர் பல தடவை சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டவர். இதனால் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் மறைவு வாழ்க்கை வாழ்ந்தவர். போர்க்குற்றம், மனித உரிமை மீறல், காணாமலாக்கப்படுதல், சித்திரவதை என்பவைகளை அனுபவத்தால் பெற்றவர். எனவே நேர்மையான நீதியை இவரிடம் எதிர்பார்க்க முடியும்.

ஆனால், இப்பணியை இவரது அலுவலகத்தால் தனித்து செய்துவிட முடியாது. தாயகத்திலும் புலத்திலும் வாழும் தமிழர்கள் இப்பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்த வேண்டும். முள்ளிவாய்க்கால் உறைநிலைக்குப் பின்னர் உலகின் பல நாடுகளில் (கனடா உட்பட) போர்க்குற்றங்கள் தொடர்பான வாய்மூலங்கள், சத்தியப் பத்திரங்கள், ஆவணங்கள் சேகரிக்கப்பட்டது. இவை அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு ஜெனிவாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

ஜெனிவா தீர்மானம் உலகம் சுற்றி வருகிறது. தமிழ் அரசியல்வாதிகள் தலையைச் சுற்றும் அறிக்கைகளை விட்டு தங்களைப் பிரபல்யப்படு;துகிறார்கள். இன்றைய தேவை ஜெனிவாவுக்கான தகவல் சேகரிப்பும் ஆவணப்படுத்தலும், உரிய வேளையில் ஒப்படைப்பதுமே. இதனைச் செய்யத் தவறின் 46:1 அர்த்தமில்லாது போய்விடும். 2022 செப்டம்பருடன் ஜெனிவாக் கதவும் மூடப்படும் நிலை ஏற்படலாம்.

பனங்காட்டான்