ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் உதவி ஆசிரியர் தீயுடன் சங்கமமானார்

479 0

ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் உதவி ஆசிரியர் பொன்னாலையூர் பண்டிதர் தி.பொன்னம்பலவாணர் (வயது-77) நேற்று (26) உயிரிழந்தார். படையினரின் வாகனம் மோதியதில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பயனின்றி நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இவர் உயிரிழந்தார்.

இன்று (27) இறுதி நிகழ்வு பொன்னாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று திருவுடல் திருவடிநிலையில் தீயுடன் சங்கமமாகியது.

கடந்த 20 ஆம் திகதி மதியம் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது யாழ். பன்றிக்கோட்டு பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மையில் படையினரின் வாகனம் இவரை மோதியது. தலையில் காயமடைந்த இவர் யாழ். போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

ஈழநாடு பத்திரிகையின் தலைமை ஒப்புநோக்குநராக இருந்த இவர் பின்னர் உதவி ஆசிரியராக உயர்ந்தார். ஊடகத்துறையில் பணியாற்றிய காலத்தில் பல ஊடகவியலாளர்களை உருவாக்கினார். அவரிடம் பயிற்சி பெற்ற சிலர் இன்றும் ஊடகத்துறையின் சிரேஸ்ட ஊடகவியலாளர்களாக பணியாற்றுகின்றனர்.

பொன்னாலை சித்திவிநாயகர் ஆலயத்தின் தலைமை அர்ச்சகராகவும் அக்கோயிலின் பரிபாலகராகவும் இறுதிவரை இருந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஆலயத்தில் வருடாந்த மகோற்சவத்தை ஆரம்பித்து வருடாந்தம் அதை சிறப்பாக நடத்திவந்தார்.

தமிழ், சமஸ்கிருதம், சமயம், இலக்கியம் போன்ற பல்துறை விற்பன்னரான இவர் பல நூல்களையும் எழுதி வெளியிட்டார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் வருகை விரிவுரையாளராகவும் கீழைத்தேயக் கல்விக் கல்லூரியின் விரிவுரையாளராகவும், வட்டுக்கோட்டை தொகுதி தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு பதவிநிலை செயற்பாட்டாளராகவும், ஆரியதிராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தின் பரீட்சை செயலாளராகவும், வெண்கரம் அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகராகவும் பணியாற்றியிருந்தார்.

மாணவர்களுடனும் பெரியவர்களுடனும் அன்பாக பழகும் மனிதநேயப் பண்புமிக்க இவர் ஆயிரக்கணக்கான நிகழ்வுகளில் பங்குபற்றி மாணவர்களுக்கும் பெரியவர்களுக்கும் அறிவுரை கூறியவர். கல்விமான்கள் பல இடங்களிலும் இருந்து இவரது ஆலயத்திற்கு வருகைதந்து அறிவுரைகளைக் கேட்டுச் செல்வதை அடிக்கடி வழக்கமாக்கிக்கொண்டனர்.

சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி நினைவாக கல்வியியலாளர்களுக்கு வழங்கப்படும் சிவத்தமிழ் விருது கடந்த 2017 ஆம் வருடம் இவருக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர்.

பொன்னாலை ஸ்ரீகண்ணன், ஸ்ரீகிருஷ்ணன் சனசமூக நிலையங்களுடன் இணைந்து வெண்கரம் பொன்னாலையில் கடந்த 10 ஆம் திகதி நடத்திய கல்விச் சங்கமம் நிகழ்வில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு அறிவுரை கூறி பரிசில்களையும் வழங்கினார். இதுவே அவர் இறுதியாக பங்குபற்றிய நிகழ்வு என்பதும் குறிப்பிடத்தக்கது.