தமிழகத்தில் 20 மாவட்டங்களில் 2-ந்தேதி முதல் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்

299 0

தமிழகத்தில் சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை இயல்பை விட சற்று அதிகமாக பதிவாகி இருந்தது. அதிலும் வடகிழக்கு பருவமழை வழக்கமாக நிறைவடையும் டிசம்பர் மாதத்தில் இருந்து ஜனவரி மாதம் 2-வது வாரம் வரை மழை பெய்தது. அதன் பின்னர், லேசான பனிப்பொழிவின் தாக்கம் தமிழகத்தின் சில இடங்களில் இருந்தது.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவத்தொடங்கியது. தொடர்ச்சியாக வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகரிக்க ஆரம்பித்தது. இந்த நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து வெயில் தன்னுடைய கோர முகத்தை காட்ட தொடங்கி இருக்கிறது. அந்தவகையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது. வருகிற 2-ந்தேதி முதல் மேலும் சில மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் கூறியதாவது:-

வருகிற 27-ந்தேதி (இன்று) முதல் 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். அதிலும் வருகிற 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தரைக்காற்று வடமேற்கு திசையில் இருந்து தமிழகம் நோக்கி வீசுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய 20 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை விட 2 டிகிரி முதல் 3 டிகிரி வரை உயரக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.