சூயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்ட சரக்குக் கப்பல் – மீட்க முடியாமல் திணறும் ஊழியர்கள்

323 0

சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள பிரம்மாண்டமான சரக்குக் கப்பலால் அந்த கடல்வழிப் பாதையில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய பரபரப்பான கப்பல் பாதையாக அறியப்படுவது எகிப்து நாட்டில் உள்ள சூய்ஸ் கால்வாய். உலகின் பல்வேறு நாட்டு சரக்குக் கப்பல்களும் இந்தப் பாதையைப் பயன்படுத்தி வருகின்றன.
இதற்கிடையே, சூயஸ் கால்வாயில் பிரம்மாண்டமான சரக்குக் கப்பல் ஒன்று சில தினங்களுக்கு முன் சிக்கிக் கொண்டுள்ளது.
குறித்த கப்பலை கூடிய விரைவில் மீட்கவில்லை என்றால் உலகப் பொருளாதாரமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.
1869-ஆம் ஆண்டில் நிறைவுசெய்யப்பட்ட அந்தக் கால்வாய் வழியாக உலக வா்த்தகத்தின் 12 சதவீதம் நடைபெற்று வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, குறுக்கே சிக்கிக் கொண்ட கப்பலின் உரிமையாளரான ஜப்பானின் ஷோயேய் கிசேன், சா்வதேச வா்த்தகத்துக்கு இழப்பை ஏற்படுத்திய இந்த விபத்துக்கு மன்னிப்புக் கோரியுள்ளார்.
400 மீட்டர் நீளமும் 2 லட்சம் டன் எடையும் கொண்ட அந்தக் கப்பலை மணலில் இருந்து வெளியே கொண்டு வர முடியாமல் மீட்புக் குழுவினா் திணறி வருகின்றனா்.
இந்நிலையில், சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள பிரம்மாண்டமான சரக்குக் கப்பல் காரணமாக அந்த கடல்வழிப் பாதையில் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் மணிக்கு ரூ.2,900 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயில் ஏற்பட்ட புழுதிப்புயலால் சிக்கி நின்ற சரக்குக் கப்பலை மீட்க முடியாமல் கப்பல் ஊழியர்கள் திணறி வருகின்றனர். இதனால் அதனைத் தொடர்ந்து வந்த 150 கப்பல்கள் காத்து நிற்கின்றன.