பாகிஸ்தானில் கொரோனா பாதிப்புடன் நேரடியாக கூட்டத்தில் பங்கேற்ற இம்ரான்கான்

316 0

கொரோனா பாதித்த நிலையிலும் நேரடியாக ஆலோசனை கூட்டம் நடத்திய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு (வயது 68) கடந்த 20-ந்தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதற்கு 2 தினங்களுக்கு முன்புதான் அவர் கொரோனா தடுப்பூசி போட்டிருந்தார்.

இதைப்போல அவரது மனைவி பஸ்ரா பிபிக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் இருவரும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது பாகிஸ்தான் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த அதிர்ச்சி மறைவதற்குள் இம்ரான்கான் செய்துள்ள மற்றொரு செயல் நாடு முழுவதும் மீண்டும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

அதாவது கொரோனா பாதித்து வீட்டு தனிமையில் இருக்கும் அவர், நேரடியாக ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தி இருக்கிறார். தனது ஊடகக்குழுவினருடன் நேற்று முன்தினம் பனிகலா வீட்டில் இந்த ஆலோசனை கூட்டத்தை அவர் தலைமையேற்று நடத்தி உள்ளார்.

இம்ரான்கான் ஒரு இருக்கையிலும், அவருக்கு அருகே ஊடகக்குழுவினர் வேறு இருக்கைகளிலும் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின. உடனே நாடு முழுவதும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.

பாகிஸ்தானில் கொரோனா பாதித்த ஒருவர் 9 முதல் 14 நாட்களுக்கு தனிமையில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆகும். ஆனால் இம்ரான்கானோ கொரோனா உறுதி செய்யப்பட்ட ஒரு வாரத்துக்குள் இந்த கூட்டத்தை நேரடியாக நடத்தியிருப்பதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளன.

நாட்டில் கொரோனாவின் 3-வது அலை பரவி வரும் நிலையில், கொரோனாவுக்கு எதிராக கடைப்பிடிக்கப்படும் நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை பிரதமரே மீறலாமா? கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சிகள், இந்த கூட்டத்தில் பங்கேற்ற அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளன.

பாகிஸ்தான் பிரதமரின் இந்த அலட்சிய செயல் நாட்டு மக்களுக்கு பலத்த கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பலரும் இம்ரான்கானுக்கு எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா பாதிப்புடன் இந்த கூட்டம் நடத்த வேண்டியது அவசியம்தானா?, காணொலி காட்சி மூலம் நடத்துவதற்கு பல்வேறு வழிகள் இருக்கும்போது அதை பரிசீலிக்காதது ஏன்? என சரமாரியாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

அதேநேரம் பாகிஸ்தான் அரசின் செய்தி தொடர்பாளர்கள் யாரும் பிரதமர் இம்ரான்கானின் செயலை நியாயப்படுத்தவில்லை. இது தொடர்பாக ஊடகங்களை சந்திப்பதை அவர்கள் தவிர்த்து வருகின்றனர்.

எனினும் இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒருவரான யூசுப் பெயிக் மிர்சா, இந்த விமர்சனங்களை நிராகரித்து உள்ளார். அவர் கூறுகையில், ‘நாங்கள் எல்லாரும் முககவசம் அணிந்திருந்தோம். யாரும், யாரையும் தொடவில்லை. அங்கு நாங்கள் எதையும் உண்ணவோ, குடிக்கவோ இல்லை. பிரதமரிடம் இருந்து குறிப்பிட்ட இடைவெளியில்தான் அமர்ந்திருந்தோம்’ என்று தெரிவித்தார்.