திமுக கூட்டணியின் வெற்றியை தடுக்கவே வருமான வரித்துறையின் சோதனைகள் நடத்தப்படுகின்றன- கே பாலகிருஷ்ணன்

296 0

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் பாஜக போட்டியிடும் நிலையில் திமுக வேட்பாளரான எவ வேலு வீட்டில் ரெய்டு நடத்தியுள்ளது உள்நோக்கம் கொண்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தி.மு.க. வேட்பாளருமான எ.வ.வேலுவின் அலுவலகம், வீடு, கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்பட 18 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க. போட்டியிடும் நிலையில் தி.மு.க. வேட்பாளரான எ.வ.வேலு வீட்டில் ரெய்டு நடத்தியுள்ளது உள்நோக்கம் கொண்டது. அவருடைய பெயருக்கு களங்கம் உருவாக்குவதற்காக பா.ஜ.க. இச்செயலை செய்கிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
தேர்தல் நெருக்கத்தில் எதிர்க்கட்சியினரை மிரட்ட, அவர்களது செயல்பாடுகளை முடக்க வருமான வரித்துறை மத்திய அரசாங்கத்தின் ஏவல் கருவிகளாக செயல்படுவது மிகவும் கண்டனத்துக்குரியது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் தோல்வி பயத்தின் காரணமாகவே இத்தகைய செயல்கள் நடத்தப்படுகின்றன. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றியை தடுத்து விடுவதற்கு பா.ஜ.க. முயற்சிப்பது கண்டனத்திற்குரியது.
எனவே, வெளிப்படையான, சமமான விளையாடுகிற தளம் அனைவருக்கும் அளிக்கப்படும் வகையில் இந்த உள்நோக்கம் கொண்ட நடவடிக்கைகளை மத்திய அரசு நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.