வவுனியாவில் வலிந்து காணாமலாக்கப்படும் குளம்! மக்கள் போராட்டம்!!

304 0

வவுனியாவில் ‘வவுனியாக் குளம் சுற்றுலா மையம்’ என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தக் கோரி சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்று முன்னெடுகக்கப்பட்டுள்ளது.

வவுனியா குளத்திற்கான மக்கள் செயலணியின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம், வவுனியா மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்றது.இதன்போது, ‘குளங்களை சாக்கடையாக்குவதா அபிவிருத்தி’, ‘அடுத்த தலைமுறையை குடிநீருக்காக கையேந்தவிடாதே’, ‘குலம் காப்போம்’ உள்ளிட்ட வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்

இந்தப் போராட்டத்தில், பொது அமைப்பினைச் சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தரப்பினர், இளைஞர் யுவதிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, வவுனியா மாவட்டத்தின் அனைத்து நீர்த் தேவைகளுக்கும் குளங்களே ஆதாரமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மக்கள், பல குளங்கள் மற்றும் விவசாய நிலங்கள் தம்முன்னே காணாமலாக்கப்படுகின்றன என தெரிவித்துள்ளனர்.

இதனொரு கட்டமாக, வவுனியா குளத்தில் தற்போது சிறியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சுற்றுலா மையமானது எதிர்காலத்தில் விஸ்தரிக்கப்படும் பட்சத்தில் குளத்தின் நீரேந்து பகுதி மேலும் சுருங்கக்கூடிய அபாய நிலைமை ஏற்படும்.

அத்துடன், சுற்றுலா மையத்தை அமைக்கும் ஒப்பந்ததாரர், நகர சபையுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மீறி, கட்டடங்கள் அமைத்துள்ளதையும் தாம் சுட்டிக்காட்டி வந்ததாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, குளத்தை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையை நிறுத்தி குளத்தின் அமைப்பை மாற்றாமல், பூங்கா அமைப்பதை முன்னெடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.